பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா ..159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்..!
இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே முதல் டி20 மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் 7 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் இருவரும் களமிறங்கினர். இவர்களின் நிதானமான ஆட்டம் அணிக்கு நல்ல தொடக்கமாக இருந்தது. இருவரின் கூட்டணியில் 50 ரன்களை எட்டிய போது அந்த அணியன் முதல் விக்கெட்டை அக்சர் படேல் கைப்பற்றினர். இதனால் ரஹ்மானுல்லா குர்பாஸ் 23 ரன்னில் வெளியேறினார்.
அடுத்தடுத்த ஒவரிலே மற்றோரு தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் 25 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் காரணமாக இந்திய அணி 9 ஓவரில் இரு விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் களமிறங்கிய வீரர்கள் நின்று நிதானமாக விளையாடினர். ஒரு முனையில் அஸ்மத்துல்லா உமர்சாய் நின்று நிதானமாக ரன்களை சேர்க்க மறுமுனையில் முகமது நபி இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
இருவரின் கூட்டணியில் 68 ரன்களை கடந்த போது 18-வது ஓவரின் முதல் பந்தில் அஸ்மத்துல்லா உமர்சாய், முகேஷ் குமாரின் பந்தில் போல்டனார். அதே நேரத்தில் 18-வது ஓவரின் கடைசி பந்தில் சிறப்பாக விளையாடி வந்த முகமது நபி அரைசதம் பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 42 ரன்னில் பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில் இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் அக்சர் படேல் , முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 159 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.