நியூஸிலாந்து அணியை பந்தாடிய ஆப்கானிஸ்தான்!! 84 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி ..!!
டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் 14-வது போட்டியில் நியூஸிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் டல்லாஸ்ஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சை நான்கு பக்கமும் சிதறிடித்து விளையாடினார்கள். அதிலும் குறிப்பாக தொடக்க வீரரான குர்பாஸ் 56 பந்துக்கு 80 ரன்கள் விளாசி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவரை தொடர்ந்து இப்ராஹிம் சத்ரான் 41 பந்துக்கு 44 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருக்கு பின் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என பேட்டிங் களமிறங்கியது நியூஸிலாந்து அணி.
பேட்டிங் களமிறங்கியது முதல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ஆப்கானிஸ்தான் அணியும் அதிரடியாக பந்து வீச்சை தொடர்ந்தது, அதிலும் ரஷீத் கான் மற்றும் ஃபசல்ஹக் பாரூக்கி இருவரும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வழி வகுத்தனர். மேலும், நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் மட்டும் 18 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனால் நியூஸிலாந்து அணி 75 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.