75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?
நடைபெற்று வரும் மெகா ஏலத்தில் ஆப்கானிஸ்தான் வீரரான அல்லா கசன்ஃபர் ரூ.4.80 கோடிக்கு ஏலம் சென்றுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய நாளில் முதற்கட்டமாக நடைபெற்ற ஏலத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரரான அல்லா கசன்ஃபர் ஏலத்திற்கு வந்தார்.
அதே போல மும்பை அணி நேற்று முழுவதும் நடைபெற்ற ஏலத்தில் அதிக ஈடுபாடை செலுத்தவில்லை. மும்பை அணி எப்பொழுதும் இளம் வீரர்களுக்கு முக்கியத் துவம் கொடுப்பதால், அவர்கள் எப்பொழுதும் அதிக தொகை உள்ள வீரர்களுக்கு ஏலம் போக மாட்டார்கள்.
நேற்று ஏலத்தில் ஆதிக்கம் செலுத்தாத மும்பை அணி, இன்று தீவிரமாக ஏலத்தில் செயல்பட்டு வருகிறது. அதன்படி, அவர்கள் ஏலத்தில் எடுத்த மற்றும் ஒரு இளம் வீரர் தான் அல்லா கசன்ஃபர். இவரை மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக போட்டியிட்டு ரூ.4.80 கோடிக்கு எடுத்துள்ளனர்.
யார் இந்த அல்லா கசன்ஃபர்?
கசன்ஃபர், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வளர்ந்து வரும் 18 வயது நிரம்பிய இளம் வீரர் ஆவார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகமானார். அதன் பிறகு தென்னாபிரிக்க அணியுடனான ஒரு போட்டியில் 3 விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வங்கதேச அணியுடனான போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன் பெயரை கிரிக்கெட் உலகிற்கு தெரியப்படுத்தினார். முன்னதாக நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரிலும் 4 போட்டிகளில் விளையாடி அதில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அந்த தொடரின் முக்கிய வீரராக பார்க்கப்பட்டார்.
கசன்ஃபர், இதுவரை மொத்தம் 16 டி20 போட்டிகளில் 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 5.71 எக்கனாமியில் ஜொலித்து வருகிறார். தற்போது, 75 லட்சம் ஆரம்பத் தொகையாக இருந்த இவரை மும்பை அணி சண்டையிட்டு 4.80 கோடிக்கு எடுத்துள்ளதால் இந்த ஐபிஎல் தொடரில் இவர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.