ரஞ்சி டிராஃபி தொடரையே ஒழித்துவிடுங்கள்! புஜாராவை பலிக்கடா ஆக்கியுள்ளது பிசிசிஐ – சுனில் கவாஸ்கர் காட்டம்

Sunil Gavaskar

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் போதும் என்று பிசிசிஐ வெளிப்படையாக கூறிவிடலாம் சுனில் கவாஸ்கர் காட்டம்.

வெஸ்ட் இன்டீஸிற்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஜூலை 12ம் தேதி முதல் தொடங்கும் இந்த போட்டிகளில் விளையாட இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இன்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சமயத்தில், அணி தேர்வு குறித்து முன்னாள் இந்திய வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக் குழுவின் முடிவு, புஜாராவை நீக்கியது மற்றும் சர்ஃபராஸ் கானை தேர்வு செய்யவில்லை என ஏராளமான விமர்சனங்கள் குவிந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ரஞ்சி டிராஃபி தொடரையே ஒழித்துவிடுங்கள், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் போதும், இந்திய அணிக்கு தேர்வகலாம் என பிசிசிஐ வெளிப்படையாக கூறிவிடலாம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ரஞ்சி சீசனில் சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடுகிறார், அவரை அணியில் எடுத்து அங்கீகரிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்றார். 2022-23 கால கட்டத்தில் மூன்று சதங்களை உள்ளடக்கிய 6 போட்டிகளில் 92.66 சராசரியுடன் 556 ரன்களை குவித்து ரஞ்சி டிராபியில் சர்ஃபராஸ் ஒரு அற்புதமான சாதனை படைத்துள்ளார். 2021-22 ரஞ்சி டிராபி தொடரில் 122.75 சராசரியில் 982 ரன்கள் எடுத்தார், இதில் நான்கு சதங்கள் அடங்கும் என்றார்.

எனவே, அவரது சிறப்பான ஆட்டம் அங்கீகரிக்கப்படம் என்று அவரிடம் சொல்லுங்கள், இல்லையெனில், ரஞ்சி டிராபி விளையாடுவதை நிறுத்துங்கள் என்று கூறிவிடுங்கள், அதனால் எந்த பயனும் இல்லை எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய சுனில் கவாஸ்கர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரஹானேவை தவிர எல்லா பேட்ஸ்மேன்களும் மோசமாக தான் ஆடினார்கள்.

ஆனால், புஜாராவை மட்டுமே பலிக்கடா ஆக்கியுள்ளது பிசிசிஐ. அவர் இந்திய கிரிக்கெட்டில் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். ஆதரவு குரல் எழுப்புவதற்கு சமூக வலைத்தளத்தில் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இல்லை என்ற ஒரே காரணத்தினால்தான் புஜாரா நீக்கப்பட்டுள்ளார் எனவும் விமர்சித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் இந்திய அணியில் புஜாரா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்