“எங்களுக்குள் ‘டாக்ஸிக்’ போட்டி இல்லை., நாங்கள் நண்பர்கள்.” கில் ஓபன் டாக்!
அபிஷேக் சர்மா என்னுடைய பால்ய நண்பன். ஜெய்ஸ்வாலும் ஒரு நல்ல நண்பன் தான். எங்களுக்கிடையில் எந்த டாக்ஸிக் போட்டியும் இல்லை என சுப்மன் கில் கூறியுள்ளார்.

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய பிறகு, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில், நாளை (ஜனவரி 6) மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது. ஒருநாள் போட்டிக்கான இந்தியா அணியை ரோஹித் சர்மா வழிநடத்த உள்ளார். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை அடுத்து இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. அதற்கு இந்த போட்டிகள் ஒரு முன்னோட்டமாக இந்தியா, இங்கிலாந்து அணிக்கு ஒரு பயிற்சி ஆட்டம் போல இருக்கும் என கூறப்படுகிறது.
பெரும்பாலும், இதில் விளையாடும் வீரர்களே சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளிலும் களமிறங்க உள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில்லும் செயல்பட உள்ளனர். இளம் வீரரை துணை கேப்டனாக நியமித்து ஒரு சில விமர்சனங்களை எதிர்கொண்டாலும், ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் கில் சிறப்பான ஃபார்மிலேயே உள்ளார் என்பது அவரது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரெக்கார்டுகள் வெளிக்காட்டுகின்றன.
இப்படியான சூழலில் நாளை இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு தயாராகி வரும் சுப்மன் கில்லிடம் போட்டிகள் பற்றியும் கிரிக்கெட் உலகில் உலாவும் பல்வேறு விமர்சனங்கள் பற்றியும் தனியார் செய்தி நிறுவனம் சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் வெளிப்படையாக தனது பதில்களை அளித்து வந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகள் குறித்து…
நாங்கள் ஒரு நல்ல அணிக்கு எதிராக விளையாட உள்ளோம். இந்த மூன்று ஒருநாள் போட்டிகளை சாம்பியன்ஸ் டிராபிக்கான பயிற்சி ஆட்டமாக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை. இதுவும் எங்களுக்கு மிக முக்கியமான தொடர் என்று தான் நான் நினைக்கிறேன். ஒவ்வொரு தொடரும் மிகவும் முக்கியமானது. மற்ற தொடர்களை போலவே இந்தத் தொடரையும் நாங்கள் முழுதாக வெல்லவே விரும்புகிறோம்.
துணை கேப்டன் பொறுப்பு பற்றி.,
சாம்பியன் டிராபி தொடரில் எனக்கு துணை கேப்டனாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அணியை துணை நின்று வழிநடத்துவதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்கிறேன். முதலில் எனது விளையாட்டு திறன், பின்னர் ரோஹித் எனது கருத்தை அல்லது வேறு எதையும் என்னிடம் இருந்து விரும்பினால் நிச்சயமாக அதையும் களத்தில் இறங்கி செய்வேன். விளையாட்டைப் பற்றிய எனது எண்ணங்களை அவருக்கு களத்தில் தெரிவிப்பது துணை கேப்டனாக எனது கடமை.
துணை கேப்டனாக, இது ஒரு பெரிய பொறுப்பு. ஆட்டத்தின் சிந்தனை குழுவின் ஒரு பகுதியாக இருப்பது, கௌதம் கம்பீர் எப்படி சிந்திக்கிறார், ரோஹித் பாய் என்ன யோசிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். சில பேட்ஸ்மேன்கள், சில பந்து வீச்சாளர்களுக்கான எங்கள் திட்டங்கள் என்ன, சில எதிரணியை எவ்வாறு எதிர்கொள்வது என பலவற்றை நான் கற்றுக்கொள்வது துணை கேப்டன் பொறுப்பில் எனக்கு ஒரு பெரிய குறிக்கோள் என்று நான் நினைக்கிறேன்.
சக வீரர்களுடனான நட்புறவு பற்றி..,
சக வீரர்கள் என் நண்பர்கள். அபிஷேக் சர்மா என்னுடைய பால்ய நண்பன். ஜெய்ஸ்வாலும் ஒரு நல்ல நண்பன் தான். எங்களுக்கிடையில் எந்த டாக்ஸிக் போட்டியும் இல்லை என்று நான் நினைக்கிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் நாட்டிற்காக விளையாடுகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட விரும்புகிறோம். இவர் சிறப்பாகச் செயல்படக்கூடாது என்றோ அவர் சிறப்பாகச் செயல்படக்கூடாது என்றோ நான் விரும்பவில்லை. ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுகிறோம். நமது அணிக்காக சிறப்பாக செயல்பட்டு விளையாட வேண்டும். யார் நன்றாகச் விளையாடினாலும் அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும். இங்கே நாங்கள் விளையாட மட்டுமே வருகிறோம். என பல்வேறு கருத்துக்களை சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணிக்கான துணை கேப்டன் சுப்மன் கில் தெரிவித்தார்.
சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்திய அணிக்காக 47 இன்னிங்ஸ்களில் விளையாடி 58.2 என்ற சராசரியை வைத்துள்ளார். அதனை 101.2 என்ற நல்ல ஸ்ட்ரைக்-ரேட்டுடன் கொண்டுள்ளார். மொத்தமாக ஒருநாள் போட்டிகளில் மட்டும் 2,328 ரன்கள் குவித்துள்ளார்.