சதம் விளாசிய அப்துல்லா, முகமது ரிஸ்வான்… பாகிஸ்தான் அபார வெற்றி …!

பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று ஒருநாள் உலகக்கோப்பையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.  இப்போட்டியில் குசல் மெண்டிஸ் அபாரமாக பேட்டிங் செய்த அதே வேளையில் அவர் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையையும் படைத்துள்ளார். இலங்கையின் ஆரம்பம் மிகவும் மோசமாக இருந்தது.

காரணம் தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா ஹசன் அலியின் பந்தில் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.  ஆனால் இதன் பின்னர் பாத்தும் நிஷங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்தனர். நிஷாங்கா அரைசதம் அடித்து அவுட்டானார். அவர் 51 ரன்கள் எடுத்தார். மெண்டிஸ் அதிரடியாக ரன்களை குவித்தார். அவர் 65 பந்துகளில் சதம் விளாசி 77 பந்துகளில் 14 பவுண்டரிகள், 6 சிக்ஸர் என மொத்தம்  122 ரன்கள் குவித்தார். இதன் மூலம் மெண்டிஸ் ஒருநாள் உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையை பெற்றார்.

அடுத்து இறங்கிய சதீர சமரவிக்ரம நிதானமாக விளையாடி 89 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர் என 108 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் கண்ட அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தனர்.  இலங்கை அணியில்  ஹசன் அலி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டையும்  வீழ்த்தினார்கள். 345 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபிக் ,  இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர்.

இமாம்-உல்-ஹக் வந்த வேகத்தில் 12 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் நிலைத்து நின்று விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது ஏமாற்றத்தில் முடிந்தது. பாபர் அசாம் வெறும் 10 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.  இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய அப்துல்லா ஷபிக் 103 பந்தில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர் உட்பட 113 ரன் எடுத்து பத்திரனா ஓவரில் பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும்  முகமது ரிஸ்வான் நிதானமாகவும் , பொறுப்புடன் விளையாடி சதம் விளாசி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். முகமது ரிஸ்வான் 121 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் என மொத்தம்  134* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டை பறித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்