பெங்களூரு அணியின் கேப்டன் யார்? “விராட் கோலியை விட சிறப்பானவர்?” அஷ்வின் கருத்து
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி வர வேண்டும் என ஏ.பி.டிவில்லியர்ஸ், அஷ்வின் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இதுவரை இல்லாத பல்வேறு சுவாரஸ்யங்களை சுமந்து கொண்டு ரசிகர்களை கொண்டாட வைக்க உள்ளது. சென்னை அணிக்கு திரும்பிய அஷ்வின், சாம் கரன், விஜய் சங்கர், டெல்லிக்கு புதிய கேப்டனாகும் கே.எல்.ராகுல், லக்னோ அணிக்கு கேப்டனாகும் ரிஷப் பண்ட், மும்பை அணி கேப்டன்சி என பல்வேறு சர்பிரைஸ்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.
அதேபோல, இதுவரை கோப்பைகளை வெல்லாவிட்டாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான அணிகளில் முக்கிய இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. விராட் கோலி தான் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இந்த உலாவல்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், முன்னாள் RCB அணியின் நட்சத்திர வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் கருத்துப்படி, விராட் கோலி மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்புவார் என கூறியுள்ளார்.
இதே கருத்தை, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் முன்வைத்துள்ளார். அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறுகையில், “RCB அணிக்கு கோலி அனைத்து விதத்திலும் சிறந்தவராக இருப்பார். அந்த அணியில் கேப்டன்சியை ஏற்கும் அளவுக்கு கோலியை தாண்டி நான் வேறு யாரையும் பார்க்கவில்லை.” எனக் கூறினார்.
மேலும், RCB அணி ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்த விதத்தையும் வெகுவாக பாராட்டினார் அஸ்வின். RCB ஏலம் பற்றி கூறுகையில், தனது தனிப்பட்ட கருத்ததுப்படி ஏலம் நன்றாக இருந்தது. பல அணிகள் தங்களது அக்கவுண்டில் பல கோடிகளுடன் வந்தனர். ஆனால், RCB அணி காத்திருந்து தங்கள் அணிக்கு தேவையான 12 அல்லது 14 வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.
இந்த வீரர்களை விட கூடாது என RTM முறைகளை தேவையின்றி பயன்படுத்தாமல், அந்த பணத்தை எந்த வீரருக்கு பயன்படுத்த வேண்டுமோ அவர்களுக்கு பயன்படுத்தினர். அதுவரை தங்கள் உத்தியை கவனமாக பின்பற்றினர் என அஸ்வின் கூறினார்.
RCB அணியின் நிர்வாக இயக்குனர் போபட், எங்கள் அணியின் கேப்டன்சி பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.