மிக முக்கிய வீரருக்கு அணியில் இடம்;3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..!
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,நடைபெற்ற தொடரின் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது.
முதல் இன்னிங்ஸ்:
இதனையடுத்து,இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.அதன்படி,முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா 10 விக்கெட் இழந்து 364 ரன்கள் எடுத்திருந்தது.இதனைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
2-வது இன்னிங்ஸ்:
அதன்பின்னர், 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 109.3 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழந்து, 298 ரன்களில் டிக்ளர் செய்தது.இதில் சிறப்பாக விளையாடிய முகமது ஷமி அரை சதத்தை கடந்தார். இங்கிலாந்து அணிக்கு 272 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி பவுலர்கள் முகமது ஷமி, பும்ராவுக்கு கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட அனைத்து சக வீரர்களும் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது.
வரலாறு படைத்த இந்தியா:
இந்த போட்டி டிராவில் முடிவடைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் 120 ரன்னிற்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று வரலாறு படைத்தது.5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
மூன்றாவது இன்னிங்ஸ்:
இந்நிலையில்,இந்தியா மற்றும் இங்கிலாந்துஅணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.இப்போட்டியானது, வரும் 25ம் தேதி தொடங்க உள்ளது.
தலைசிறந்த வீரர்:
இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில், தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் டேவிட் மாலன் சேர்க்கப்பட்டுள்ளார்.2021 மார்ச் 20 நிலவரப்படி, அவர் ஐசிசி டி 20 ஐ பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஜோ ரூட், மொய்ன் அலி, ஆண்டர்சன், பட்லர் போன்ற வழக்கமான அனைத்து வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.மேலும்,ஷாகிப் மஹ்மூத், க்ராய்க் ஓவர்டன், ஹசீப் ஹமீத் ஹமீத் போன்ற வீரர்களும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அதே சமயம்,கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடாத காரணத்தால் பேட்ஸ்மேன்கள் டாம் சிப்லே, ஜேக் க்ராவ்லே ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி;
ஜோ ரூட் (கேப்டன்), மொய்ன் அலி, டேவிட் மாலன், க்ராய்க் ஓவர்டன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பாரிஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கர்ரான், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், ஷாகிப் மஹ்மூத், ஓலி போப், ஓலி ராபின்சன், மார்க் வுட்.