கோலிக்கு ஒரு சட்டம், நடராஜனுக்கு ஒரு சட்டமா? – சுனில் கவாஸ்கர் கேள்வி
கோலிக்கு ஒரு சட்டம், நடராஜனுக்கு ஒரு சட்டமா? என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் ஸ்டாரில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகமாகியுள்ள நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகே ஊருக்கு சென்று தனது குழந்தையின் முகத்தை பார்க்க முடியும். ஆனால், கேப்டன் விராட் கோலி தனது மனைவியின் பிரசவத்திற்காக தொடரின் பாதியிலேயே தாயகம் திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோலிக்கு ஒரு சட்டம், நடராஜனுக்கு ஒரு சட்டமா? இதுதான் இந்திய கிரிக்கெட்டா?என சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு போட்டியில் அஸ்வின் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால் அவர் அடுத்த போட்டிகளில் ஓரங்கட்டப்படுவார். ஆனால், இது போன்ற பிரச்சனைகள் பேட்ஸ்மென்களுக்கு இருப்பதில்லை என்றார். இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் ஒவ்வொரு விதிகள் என்று கவாஸ்கர் கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான நடராஜன் சில நாட்களிலேயே ஒரு குழந்தைக்கு தந்தையானார். ஆனால், அவர் அமீரகத்தில் ஐ.பி.எல். விளையாட்டினை முடித்த கையோடு ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அவர், இன்னும் தன்னுடைய மகளை பார்க்கவில்லை. ஆனால், விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் தன்னுடைய முதல் குழந்தை பிறக்கும் தருணத்தில் தன் மனைவியின் அருகே இருக்க இந்தியா சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.