7 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி…!!

Default Image

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2–வது ஒருநாள் கிரிக்கெட்

ஆஸ்திரேலியா–தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 48.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 231 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக அலெக்ஸ் காரி 47 ரன்னும், கிறிஸ் லின் 44 ரன்னும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 41 ரன்னும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டும், ஸ்டெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலிய அணி வெற்றி

பின்னர் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியினர், ஆஸ்திரேலிய வீரர்களின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் (47 ரன்கள்), டேவிட் மில்லர் (51 ரன்கள்) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து நின்றனர்.

கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் தென்ஆப்பிரிக்க அணியினரால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 7 ஒருநாள் போட்டிகளில் கண்ட தோல்விக்கு ஆஸ்திரேலிய அணி முடிவு கட்டியது. நிகிடி 19 ரன்னுடனும், இம்ரான் தாஹிர் 11 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மார்கஸ் ஸ்டோனிஸ் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ரபடாவுக்கு சிக்கல்

இந்த போட்டியின் 27–வது ஓவரில் தென்ஆப்பிரிக்க வீரர் ரபடா பந்து வீச்சில் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின், அடுத்த 3 பந்துகளை தொடர்ச்சியாக பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் கிறிஸ் லின், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரது விக்கெட்டை வீழ்த்தியதை ஆக்ரோ‌ஷத்துடன் கொண்டாடிய ரபடா, கிறிஸ் லினை நோக்கி ஏதோ திட்டினார்.

இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி விதித்தாலே ரபடா சில போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்படலாம். ஏனெனில் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக அவர் ஏற்கனவே 7 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆட்டம்

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரில் 1–1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. பெர்த்தில் நடந்த முதலாவது போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை ஹோபர்ட்டில் நடக்கிறது.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்