INDvsWI: ரன்களை குவித்த பூரன்-பொல்லார்ட் ! இந்திய அணிக்கு 316 ரன்கள் இலக்கு

- இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
- 3 வது ஒருநாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 315 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார்.இந்திய அணியில் தீபக் சாகருக்கு பதிலாக சைனி சேர்க்கப்பட்டார்.
இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ,மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தொடங்கியது.ஆனால் அந்த அணி ஆரம்பத்தில் இந்திய அணியின் பந்துவீச்சில் சொதப்பலாக விளையாடியது.இதன் விளைவாக தொடக்க ஆட்டக்காரர்கள் லீவிஸ் மற்றும் ஹோப் ஆமை வேகத்தில் விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தனர். லீவிஸ் 21 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் சைனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.ஹோப் 42 ரன்களில் சமி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
இதன் பின்பு களமிறங்கிய சேஸ் மற்றும் ஹெட்மயர் ஜோடி ஓரளவு நிலைத்து நின்று ஆடினார்கள்.ஆனால் சேஸ் 38 ரன்கள் மற்றும் ஹெட்மயர் 37 ரன்களில் வெளியேறினார்கள்.நிதானமாக விளையாடி கொண்டிருந்த மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரன்னை உயர்த்துவதற்கு கேப்டன் பொல்லார்ட் மற்றும் பூரன் பொறுப்புடன் விளையாடி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார்கள்.பொறுப்பாக விளையாடிய பூரன் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.ஆனால் 89 ரன்கள் அடித்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.பூரன் விக்கெட்டை பறிகொடுத்தாலும் கேப்டன் பொல்லார்ட் பொறுப்பாக விளையாடி அவரும் அரை சதம் அடித்தார்.
இறுதியாக மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் அடித்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் சைனி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.மேற்கு இந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக பூரன் 89 ரன்கள்,பொல்லார்ட் 74*ரன்கள் அடித்தார்கள். இந்திய அணிக்கு 316 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.