சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க 3 கிரிக்கெட் வீரர்களுக்கு தடை;தலா ரூ.37 லட்சம் அபராதம் ..!
இலங்கை வீரர்கள் தனுஷ்கா குணதிலகா, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகிய 3 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஓர் ஆண்டு தடை மற்றும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.37 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இலங்கை அணி ஒருநாள் தொடர்களில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.கொரோனா காரணமாக,உயர்பாதுகப்புடன் பயோ-பபிள் சூழலில் தங்கியிருக்க வேண்டியிருந்தது.
விதி மீறல்:
இந்த நிலையில்,இலங்கை வீரர்கள் தனுஷ்கா குணதிலகா, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் பயோ-பபிள் சூழல் விதிமுறையை மீறி டர்ஹாம் வீதிகளில் புகைப்பிடித்து கொண்டு சுற்றித் திரிந்தனர்.இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.
விசாரணை ஆணையம்:
இதனால்,மூன்று வீரர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டு சுற்றுப்பயணத்திலிருந்து உடனடியாக நாடு திரும்பினர், அதே நேரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒழுங்கு குழுவை அமைத்து இலங்கை வாரியம் இது குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைத்தது.
அறிக்கை:
அந்த ஆணையம் வியாழக்கிழமை அளித்த அறிக்கையில்,”மென்டிஸ் மற்றும் குணதிலகாவுக்கு இரண்டு வருட தடைகளையும், டிக்வெல்லாவிற்கு 18 மாத தடையையும் பரிந்துரைத்திருந்தது.ஆனால்,வீரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தேசிய அணிக்கு அவர்களின் பங்களிப்பை மேலும் கருத்தில் கொண்டு ஒருமனதாக முடிவு செய்து, தகுந்த பரிசீலனைக்குப் பிறகு தண்டனைகளின் காலத்தை குறைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) முடிவு செய்தது.
தடை:
இந்நிலையில்,இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தனுஷ்கா குணதிலகா, குஷால் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது உயிரி குமிழியை மீறியதற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒரு வருடத்திற்கு தடை விதித்து,இலங்கை கிரிக்கெட் வாரியம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.
அபராதம்:
அதுமட்டுமல்லாமல்,வீரர்கள் 6 மாதங்களுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, தலா 10 மில்லியன் இலங்கை ரூபாய் (ரூ.37 லட்சம் இந்திய மதிப்பில்) அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்,3 வீரர்களும் இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவரின் கீழ் கட்டாய ஆலோசனை பெற வேண்டும்”,என்றும் தெரிவித்துள்ளது.
முதல் முறையல்ல:
இருப்பினும்,குணதிலகா தவறான நடத்தைக்கான தடையைப் பெறுவது இது முதல் முறை அல்ல.இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடரின் போது தவறான நடத்தைக்காக 2017 இல் 3 போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டார்.மேலும்,நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக 2018 ஆம் ஆண்டிலும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தத் தடைகாரணமாக,3 வீரர்களும் ஐக்கியஅரபு அமீரகத்தில் நடக்கும் டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை,மாறாக, 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி-20 உலகக் கோப்பைக்குப் போட்டிக்கு முன்பாக அணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.