3 வீரர்கள் அரைசதம் விளாசல்.. ஆப்கானிஸ்தான் அபார வெற்றி..!
ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவரில் 242 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கோப்பையின் 30-வது லீக் போட்டியானது இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்து. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் தொடக்கட்ட வீரர்களாக பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன இருவரும் களமிறங்கினர். 6-வது ஓவரில் திமுத் கருணாரத்ன 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து குசல் மெண்டிஸ் களமிறங்க அதிரடியாக விளையாடி வந்த தொடக்க வீரர் பதும் நிஸ்ஸங்க அரைசதம் அடிக்காமல் 46 ரன்னில் வெளியேறினார். பின்னர் சதீர சமரவிக்ரம மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி வந்தனர். இருப்பினும் குசல் மெண்டிஸ் 39 ரன்னிலும், சதீர சமரவிக்ரம 36 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்கள். அதன் பின் களமிறங்கிய சரித் அசலங்கா 22, தனஞ்சய டி சில்வா 14, துஷ்மந்த சமீர 1 என ரன்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசியில் இறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் மகேஷ் தீக்ஷனா இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்ந்தனர்.
நிதானமாக விளையாடி வந்த இருவரும் ஃபசல்ஹக்கிடம் அடுத்தடுத்த ஓவரில் ஏஞ்சலோ மேத்யூஸ் 23 ரன்னும் மற்றும் மகேஷ் தீக்ஷனா 29 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியாக இலங்கை அணி 49.3 ஓவரில் 241 ரன்கள் எடுத்து 10 விக்கெட்களையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை பொறுத்தவரையில் ஃபசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்டையும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டையும் , அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான் ஆகியோர்கள் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தானின் தொடக்க வீரர்களாக இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடங்கிய 4 பந்திலே அதிரடி வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் டக் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ரஹ்மத் ஷா மறுபுறம் இருந்த இப்ராஹிம் சத்ரான் உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள்.
நிதானமாக விளையாடி வந்த இப்ராஹிம் சத்ரான் அரைசதம் அடிக்காமல் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் விளையாடி வந்த ரஹ்மத் ஷா அரைசதம் விளாசி அதிரடி காட்டி வந்தார். இருப்பினும் கசுன் ரஜிதா வீசிய பந்தில் ரஹ்மத் ஷா 62 ரன் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். இவர்களை தொடர்ந்து கேப்டன் ஹெஷ்மத்துல்லாஹ் ஷாஹிதி மற்றும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஜோடி சேர்த்தனர். அவர்களின் கூட்டணியை இலங்கை அணி பிரிக்க முடியாமல் திணறி வந்தது.
ஆனாலும் தங்களின் சிறப்பான ஆட்டத்தால் இருவரும் அரைசதம் விளாசினார்கள். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவரில் 242 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் ஒமர்சாய் 78* ரன்களுடனும், ஷாஹிதி 58* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க விக்கெட்டையும் , கசுன் ராஜித 1 விக்கெட்டை பறித்தார்.