ரோஹித் சர்மா உட்பட 3 இந்திய வீரர்கள், ஒருநாள் தொடரிலிருந்து விலகல்!
இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா உட்பட 3 இந்திய வீரர்கள் காயத்தால் விலகியுள்ளனர்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி, வெற்றி பெற்றது, நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியிலும் கடைசி பந்தில் இந்தியா, வெற்றியை கோட்டை விட்டது.
இந்த போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறிய ரோஹித் சர்மா, இந்திய அணிக்காக 9ஆவது வீரராக களமிறங்கி வெற்றிக்கு போராடினார். அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார், கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தார்.
Gets hit
Comes back for the team
Walks in at No.9 in a run-chase
Scores 51*(28) to get us close to the target
Take a bow captain! ???? ????#TeamIndia | #BANvIND | @ImRo45 pic.twitter.com/v47ykcbMce
— BCCI (@BCCI) December 7, 2022
இறுதியில் வங்கதேச அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது. இந்த போட்டியிலிருந்து காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சிகிச்சைக்காக மும்பை செல்லவிருக்கிறார். மருத்துவ ஆலோசனைக்குப்பிறகு தான் ரோஹித், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது உறுதியாகும் என்று போட்டிக்கு பிறகு ராகுல் டிராவிட் கூறினார். இதேபோல் தீபக் சஹர் மற்றும் குல்தீப் சென் ஆகியோரும் 3-வது போட்டியில் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2-வது போட்டியில் தீபக் சஹர் 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசினார், மேலும் குல்தீப் சென் ஏற்கனவே 2 ஆவது போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.