இந்தியா- இலங்கை இடையே இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி;சாதனை பட்டியலில் ரோஹித்!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி,மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,இந்தியா 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து,இரண்டாவது மற்றும் கடைசி போட்டி இன்று மதியம் 2 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.அதே நேரத்தில், இந்த டெஸ்ட் போட்டி பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாக இருக்கும்.
இந்நிலையில்,இந்திய அணியின் மூன்று வடிவங்களின் கேப்டனான ரோஹித் ஷர்மாவுக்கு இன்று இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள பிங்க் பால் டெஸ்ட் போட்டி வரலாற்று சாதனை போட்டியாக இருக்கும். ஏனெனில் இது ரோஹித்தின் கேரியரில் 400-வது சர்வதேச போட்டியாகும்.
அதன்படி,இன்று ரோஹித் விளையாடுவதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறும். இந்த வீரர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் 400 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்த சாதனையை நிகழ்த்தும் 9-வது இந்திய வீரர் ரோஹித் .
இந்தியாவிற்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர்-664 போட்டிகள்
தோனி – 538 போட்டிகள்
ராகுல் டிராவிட் – 509 போட்டிகள்
விராட் கோலி – 457 போட்டிகள்
முகமது அசாருதீன் – 433 போட்டிகள்
சவுரவ் கங்குலி – 424 போட்டிகள்
அனில் கும்ப்ளே – 403 போட்டிகள்
யுவராஜ் சிங் – 402 போட்டிகள்
தற்போது,இந்த வரிசையில் ரோஹித் சர்மாவின் பெயரும் இடம்பெறவுள்ளது.
ரோஹித் சர்மாவின் சர்வதேச வாழ்க்கை:
இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவின் சர்வதேச வாழ்க்கையில் மூன்று வடிவங்களிலும் தன்னை நன்றாக நிரூபித்துள்ளார். ஆனால் எந்த ஃபார்மட்டில் ரோஹித்தின் தாக்கம் அதிகமாக இருந்தது என்று பேசினால் அது ஒருநாள் கிரிக்கெட்தான்.
ரோஹித் சர்மாவின் ஒருநாள் போட்டி பற்றி பேசுகையில், அவர் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 230 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 9283 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 44 அரை சதங்களும், 29 சதங்களும் அடங்கும். அதே நேரத்தில், ரோஹித் ஒருநாள் போட்டியில் 3 இரட்டை சதங்களையும் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 264 ரன்கள் எடுத்துள்ளார்.
இது தவிர டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில், ரோஹித் டி20யில் இந்திய அணிக்காக 125 போட்டிகளில் 3313 ரன் எடுத்துள்ளார். 44 டெஸ்ட் போட்டிகளில் 3076 ரன் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடித்துள்ள ரோஹித் டெஸ்டில் 14 அரை சதங்கள் மற்றும் 8 சதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.