IND vs ENG : மீண்டும் அதிரடி சரவெடி தொடருமா? சென்னையில் 2வது டி20 போட்டி இன்று தொடக்கம்..
இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது.
முதல் டி20 போட்டியில் 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியை, இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சும், பேட்டிங்கும் மிகச் சிறப்பாக இருந்தது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது டி20 போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக நேற்றே ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வீரர்களும், சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணி சார்பில், சூரியகுமார் யாதவ் தலைமையில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், நிதிஷ் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி/ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் தலைமையில் பென் டக்கெட், பிலிப் சால்ட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . உறுதியான அணி வீரர்கள் விவரம் போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.