AUS vs IND : பகல்-இரவாக நடக்கப்போகும் 2-வது டெஸ்ட் போட்டி! பிங்க்-பந்தில் இந்திய அணியின் ரெக்கார்டுகள் என்ன?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியானது அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வரும் டிச-6ம் தேதி தொடங்கவுள்ளது.
அடிலெய்டு : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த நவ-22ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி வழக்கம் போல நடைபெறும் பகல் நேராக போட்டியாக அல்லாமல் பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதனால், இந்த போட்டியில் ‘பிங்க்-கலர்’ பந்தை வைத்து விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிங்க் பந்து அதாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 75% ஆகவே இருந்து வருகிறது. ஆனாலும், இந்திய அணிக்கு ஒரு பிரச்சினை இருந்து வருகிறது. அதாவது, இந்திய அணி கடந்த 5 வருடங்களில் இதுவரை 4 பிங்க் பால் டெஸ்ட் போட்டி விளையாடி இருக்கிறது.
அதில், 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இந்திய அணி தோல்வியடைந்துள்ள அந்த ஒரு போட்டி ஆஸ்திரேலிய அணியுடன் தான். அதுவும் இதே அடிலெய்டு ஓவல் மைதானத்தில் தான் இந்திய அணி அந்த தோல்வியை தழுவியிருக்கிறது.
இதனால், டிச-6ம் தேதி நடைபெறவுள்ள இந்த போட்டி இந்திய அணிக்கு சவாலாகவே அமைய வாய்ப்புள்ளது. மேலும், கடந்த முதல் போட்டியில் இந்திய அணியை பும்ரா கேப்டனாக வழிநடத்தினார். ஆனால், இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் இணைவார் என தெரிவித்துள்ளனர்.
இந்த 2-வது போட்டியில் பெரிதளவு அணியில் மாற்றம் இருக்காது எனவும் ஒரு சில மாற்றங்களை இந்திய அணி செய்யும் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு இந்த தொடரில் மீதம் இருக்கும் அனைத்து போட்டிகளும் மிகமுக்கியமான போட்டிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.