2023 உலகக் கோப்பை தொடர்! சர்வதேச தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக தொடங்க உள்ளது. நாளை உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன. உலகக்கோப்பைக்கான முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நாளை முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. உலகக் கோப்பை தொடருக்கான எதிர்பார்ப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை நரேந்திர மோடி மைதானத்தில் உலகக்கோப்பை தொடருக்கான தொடக்க விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில், 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான சர்வதேச தூதராக கிரிக்கெட் ஜாம்பவான் கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்லப்படும் சச்சின் டெண்டுல்கரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நியமனம் செய்துள்ளது. தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 6 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ள சச்சின் டெண்டுல்கர், நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியை உலகக் கோப்பை டிராபியுடன் வந்து தொடங்கி வைக்க உள்ளார்.
2023 உலகக்கோப்பை தொடருக்கான சர்வதேச தூதராக நியமிக்கப்பட்டது தொடர்பாக சச்சின் கூறுகையில், 1987ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பால் பாய்-ஆக இருந்து, தனது வாழ்க்கையில் 6 முறை உலகக்கோப்பை தொடரில் விளையாடி நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது என் இதயத்தில் இருந்து நீங்காத தருணமாக உள்ளது. இதில், குறிப்பாக 2011ல் உலகக் கோப்பையை வென்றது எனது கிரிக்கெட் பயணத்தின் பெருமையான தருணம். இந்த நிலையில், நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் சிறந்த அணிகள் மற்றும் திறமையான வீரர்கள் உள்ளதால், போட்டியை காண எதிர்நோக்கி உற்சாகத்துடன் காத்திருக்கின்றேன் என தெரிவித்தார்.
உலகக்கோப்பை போன்ற நிகழ்வுகள் இளம் வீரர்களின் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்துகிறது. இம்முறை உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் பல இளம் சிறுவர், சிறுமியர் கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்து ஆடத் துவங்குவார்கள் என நம்புவதாக தெரிவித்தார். மேலும், 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான சர்வதேச தூதராக தன்னை நியமனம் செய்தது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது எனவும் தெரிவித்தார். உலகக்கோப்பை தொடருக்கான சர்வதேச தூதராக சச்சின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற அணிகளில் இருந்தும் முன்னாள் ஜாம்பவான்களை ஐசிசி வல்லுநர் குழு உறுப்பினர்களாகவும் அறிவித்துள்ளது.
ஐசிசி வல்லுநர் குழு உறுப்பினர்கள் போட்டிகள் குறித்த ரசிகர்களுடன் கலந்துரையாடி தங்கள் கருத்துக்களை கூறுவார்கள் என ஐசிசி கூறி உள்ளது. இந்த குழுவில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், இங்கிலாந்தின் இயான் மோர்கன், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், இந்தியாவின் சுரேஷ் ரெய்னா, மிதாலி ராஜ் மற்றும் பாகிஸ்தான் ஆல் – ரவுண்டர் முகமது ஹபீஸ் ஆகியோர் உள்ளனர்.