2023 ஒருநாள் உலகக் கோப்பை! இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்.. ஆரோன் ஃபின்ச் கணிப்பு!
உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் 5-ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அக்.5ம் தேதி முதல் தொடங்கி நவ.19ம் தேதிவரை உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
உலக்கோப்பை தொடர் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெறுகிறது. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன. நாளை மறுநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அணிகள் கடந்த சில நாட்களாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இதில் ஒரு சில பயிற்சி போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிக்கு இந்த நான்கு அணிகள் தான் தகுதி பெரும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் கணித்துள்ளார். கிரிக்கெட் உலகில் நன்கு மதிக்கப்படும் நபரான ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், வரவிருக்கும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைக்கான தனது கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார். உலகக்கோப்பை தொடர் அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகளும் முதல் 4 இடங்களை உறுதி செய்யும் என்று அவர் நம்புகிறார்.
சமீபத்தில் நடந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான நேர்காணலில் பேசிய ஆரோன் ஃபின்ச், ஒருநாள் உலகக் கோப்பை 2023 பற்றிய தனது விருப்பங்களை பற்றி தெரிவித்தார். அவரது கணிப்புகள் உலகக்கோப்பை போட்டியின் கட்டமைப்பிற்கு ஒரு அற்புதமான பரிமாணத்தை சேர்க்கின்றன. அவரது கணிப்பில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு செல்லும் என நம்புகிறார். மேலும், ஒவ்வொரு அணியின் திறன், வரலாறு, சாதனை மற்றும் சாதகம் குறித்தும் எடுத்துரைத்தார்.
அதன்படி, இந்தியா: இந்தாண்டு இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் களமிறங்குவதால், அவர்களுக்கு சாதகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், சொந்த மண்ணில் இந்தியாவின் அற்புதமான சாதனைகள் உள்ளது. இத்துடன், இந்தியாவின் வலுவான பேட்டிங் வரிசை மற்றும் தரமான பந்துவீச்சு இருப்பது அணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இதனால் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி ஒரு வலிமைமிக்க அணியாக இருக்கும்.
இங்கிலாந்து: திறமை வாய்ந்த இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் இங்கிலாந்து அணி ஒரு சிறந்த அணியாக பார்க்கப்படுகிறது. ஒரு நல்ல கலவையான வீரர்களை கொண்டுள்ளது. லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் அவர்களின் சமீபத்திய வெற்றிகள் அவர்களை ஒரு வலிமைமிக்க அணியாக மாற்றியுள்ளன.
ஆஸ்திரேலியா: சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் நிலையான செயல்பாடுகள், அவர்கள் படைத்துள்ள வரலாற்றையும், மேலும் ஆஸ்திரேலிய அணியின் அனுபவம் குறித்தும் ஃபின்ச் எடுத்துரைத்தார். கிரிக்கெட் வரலாற்றில் அரையிறுதியில் இடம்பிடிக்கும் திறன் கொண்ட அணியாக ஆஸ்திரேலியா இருந்து வருகிறது. அது இந்த உலகக்கோப்பை தொடரிலும் இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான்: ஃபின்ச்சின் கணிப்புகளில் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை டாப் லிஸ்டில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி ஒரு நல்ல திறமை மற்றும் திறன் வாய்ந்த அணியாக செயல்படுகிறது. இது அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆசிய துணை கண்டத்தில் சிறப்பாகச் செயல்படும் பாகிஸ்தானின் வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், முதல் 4 இடங்களுக்குள் ஒரு இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு இருப்பதாகவும் பின்ச் நம்புகிறார்.
எனவே, ஆரோன் ஃபின்ச்சின் கணிப்புகளுடன், ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான எதிர்பார்ப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியின் தொடக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் கணிப்பில் உள்ள இந்த நான்கு அணிகளின் போட்டியை காண்பதற்கும் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.