பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. முகமது ஹபீஸ் (126), ஹரிஸ் சோஹைல் (110) சதம் அடித்தனர்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 13 ஓவரில் 30 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 17 ரன்னுடனும், ஆரோன் பிஞ்ச் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆரோன் பிஞ்ச் 95 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஆரோன் பிஞ்சிற்கு இதுதான் அறிமுக டெஸ்ட் ஆகும். அறிமுக டெஸ்டிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் விளையாடிய கவாஜாவும் அரைசதம் அடித்தார்.
ஆஸ்திரேலியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 46 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் சேர்த்தது. ஆரோன் பிஞ்ச் 59 ரன்களுடனும், கவாஜா 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 142 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷேன் மார்ஷ் களம் இறங்கினார். இவர் 7 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் கவாஜா 85 ரன்னிலும் ஆட்டமிழந்தார். கவாஜா ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் பிலால் ஆசிப் சுழலில் சிக்கி ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திக்குமுக்காடினார்கள். அறிமுக வீரர்களான டிராவிஸ் ஹெட், லபுஸ்சேன்னே டக்அவுட்டில் வெளியேறினார்கள். பீட்டில் சிடில் (10), மிட்செல் மார்ஷ் (12) மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் அடித்தனர்.
அறிமுக வீரரான பிலால் ஆசிப் 6 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியா 202 ரன்னில் சுருண்டது. 142 ரன்னுக்கு விக்கெட் ஏதும் இழக்காத ஆஸ்திரேலியா கடைசி 62 ரன்னுக்குள் 10 விக்கெட்டுக்களை இழந்து பாலோ-ஆன் ஆனது.
ஆனால் பாகிஸ்தான் பாலோ-ஆன் கொடுக்காமல் 280 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
DINASUVADU