2011 – 2023 உலககோப்பை இந்திய அணிகளுக்கு இதுதான் வித்தியாசம் – சுட்டிக்காட்டிய எம்எல் தோனி!
2023ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் 10 அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இம்முறை சொந்த மண்ணில் நடைபெறுவதால், இந்தியாவுக்கு சற்று சாதகமாக உள்ளது. அந்தவகையில் ரோஹித் சர்மா தலையிலான இந்திய அணி தொடர்ந்து 5 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்திய அணி அணியில் ரோஹித், கோலி, கில், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்று, பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. இதனால், இம்முறை உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், 2011 மற்றும் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை இந்திய அணிகளுக்கு இடையேயான முக்கிய வித்தியாசத்தை எம்எஸ் தோனி சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி, முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பை கைப்பற்றியது.
2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா?…காயம் எப்படி இருக்கு – தோனி சொன்ன பதில்!
12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரோஹித் ஷர்மா தலைமையிலான தற்போதைய இந்திய அணி 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை சரியான பாதையில் நகர்கிறது. மேலும் உள்நாட்டில் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் முன்னைப்பில் உள்ளது. நடப்பு பதிப்பில் இந்தியா இதுவரை தனது ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அதிகபட்சமாக 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என மீண்டும் குறிப்பிடப்படுகிறது.
எனவே, 2011 மற்றும் 2023 இந்திய அணிகளை வேறுபடுத்துவதற்கு வீரர்களின் ‘மனநிலை’ ஒரு முக்கிய காரணியாக உள்ளது என முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எம்எஸ் தோனி, 2011 மற்றும் 2023 ஆகிய இரண்டு இந்திய அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. அந்த அணி (2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி) மிகவும் ஒற்றுமையாக இருந்தது.
அதாவது, சச்சின் டெண்டுல்கருக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினர். இதனால், உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மனநிலை மட்டுமே இரு தரப்புக்கும் உள்ள ஒரே வித்தியாசம். இந்த அணி குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை. விராட் கோலிக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று யார் விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் இந்தியாவுக்கு நிச்சயம் வெற்றியை பெற்று தர வேண்டும். இது ஒரு பெரிய வித்தியாசம் என்று தோனி கூறினார்.
மேலும் தோனி கூறுகையில், தற்போது இந்திய அணி மிகவும் நல்ல அணியாக இருக்கிறது. குறிப்பாக அணியின் சமநிலை மிகவும் அற்புதமாக இருக்கிறது. அதே சமயம் அணியில் இருக்கும் அனைவரும் நன்றாக விளையாடுகின்றனர். அதனால், அணியில் அனைத்தும் நன்றாக இருக்கிறது. இதைத் தவிர்த்து நான் வேறு எதுவும் கூறமாட்டேன். புத்திசாலிகளுக்கு இந்த சிக்னலே போதும் என்று கூறினார்.
உலகின் அனைத்து ஐசிசி கோப்பைகளையும் பெற்ற ஒரே கேப்டன் எம்எஸ் தோனி என அனைவருக்கும் தெரியும். 2011 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணிய வீழ்த்தி சச்சின் டெண்டுல்கருக்கு கோப்பையை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர். அந்த வகையில் அனைத்து வீரர்களும் இம்முறை உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதால் 12 ஆண்டுகளுக்கு முன்பு தோனி தலைமையில் நிகழ்ந்த 2011 மேஜிக் மீண்டும் 2023ல் அரங்கேறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.