ஐபிஎல் 2024: நாலாபுறமும் பந்தை பறக்கவிட்ட டி காக்.. பெங்களூரு அணிக்கு 182 ரன்கள் இலக்கு..!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர்.
நடப்பு ஐபில் தொடரின் 15-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியதும் தொடக்க வீரரும் , கேப்டனுமான கே.எல் ராகுல் 2 சிக்ஸர் உட்பட 20 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் ஓவரில் மயங்க் தாகரிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த தேவ்தட் படிக்கல் நிலைத்து நிற்காமல் வந்த வேகத்தில் வெறும் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தொடக்க வீரர் குயின்டன் டி காக் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்து வந்தார். பின்னர் மார்கஸ் ஸ்டோனிஸ் உடன் கைகோர்த்த குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி அரைசதம் பூர்த்தி செய்தார். இருப்பினும் சிறப்பாக விளையாடிய மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இருவரின் கூட்டணியில் 29 பந்தில் 56 ரன்கள் சேர்க்கப்பட்டது.
அதிரடியாக விலையாடி வந்த குயின்டன் டி காக் 56 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட மொத்தம் 81 ரன்கள் குவித்தார். மறுபுறம் களத்தில் இருந்த நிக்கோலஸ் பூரன் 19 ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி கடைசிவரை 40* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டையும், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, யாஷ் தயாள் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.