15 கோடி மோசடி வழக்கு : தோனிக்கு பிசிசிஐ போட்ட உத்தரவு?
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. ஆனால், தோனி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி வந்த அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்திய அணிக்காக விளையாடும் போதும் பல வித சர்ச்சைகளை இவர் எதிர்கொண்டார். தற்போது அணியில் இருந்து விலகிய போதும் இவர் சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது இவர் மீது ஒரு புகார் ஒன்று எழுந்துள்ளது. அது என்னவென்றால் 15 கோடி ரூபாய் மோசடி வழக்கு ஒன்றில் தோனி சம்மந்தப்பட்டு இருப்பதாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் மௌரியா என்பவர் பிசிசிஐ நெறிமுறை ஆணைக்குழுவுக்கு புகார் அளித்திருக்கிறார்.
அவர் அளித்த அந்த புகாரில், ’15 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தோனி சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் அதில் உண்மை என்ன என்பது குறித்து பிசிசிஐ விசாரிக்க வேண்டும்’ என அவர் வலியுறுத்தி இருக்கிறார். இதனால், ராஜேஷ் குமார் அளித்த அந்த புகாரை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ நெறிமுறை ஆணைக்குழு, வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் எம்.எஸ்.தோனி இந்த புகாரை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஒரு தகவல் பரவலாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்தின் ஆரம்பம் எங்கிருந்து தொடங்கியதென்றால், தோனியின் முன்னாள் நண்பர்களான திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோர் எம்.எஸ்.தோனியின் பெயரில் கிரிக்கெட் பயிற்சி மையம் ஒன்று அமைப்பதற்கு ஒப்பந்தம் போட்டு கொண்டனர். இந்த மையம் மூலமாக வரும் லாபத்தின் ஒரு பங்கை தோனிக்கு கொடுக்க ஒரு நிபந்தனையும் போட்டனர். ஆனால் இருவரும் 7 பயிற்சி மையங்கள் அமைத்தும், தோனிக்கு தரவேண்டிய பணத்தை தராமல் இருந்தனர்.
இதனால் தோனி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, தனக்கு 15 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும் என கூறி அவர் வழக்கும் தொடர்ந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தோனிக்கு தான் அவர்கள் இருவரும் ரூ.15 கோடி பணம் தர வேண்டும். ஆனால், தற்போது ராஜேஷ்குமார் இந்த சம்பவம் என்னவென்று தெரியாமல் தோனியின் பெயரில் பிசிசிஐயிடம் புகார் அளித்திருக்கிறார். இதற்கு விளக்கம் கேட்டு தான் பிசிசிஐ தோனிக்கு உத்தரவு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.