பரோடாவைச் சேர்ந்த 14 வயது இளம் இந்திய வீரரான பிரியான்ஷு மோலியா ஒரே இன்னிங்சில் 556 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து திகைக்கவைக்கும் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
இவரது பயிற்சியாளர் வேறு யாருமல்ல, 1983 உலகக்கோப்பை நாயகன் மொஹீந்தர் அமர்நாத் தான். 319 பந்துகளில் 98 பவுண்டரிகல் 1 சிக்சருடன் 556 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் மோலியா. மொஹீந்தர் அமர்நாத் கிரிக்கெட் அகாடெமிக்காக ஆடிய மோலியாவின் இந்த இன்னிங்சினால் அந்த அணி 826/4 என்ற இமாலய ரன் எண்ணிக்கையை எட்டியது. இது டிகே கெய்க்வாட் அண்டர் 14 தொடராகும்.
தன் இன்னிங்ஸ் குறித்து மோலியா மிட் டே இதழுக்குக் கூறும்போது, “என்னுடைய முந்தைய உயர்ந்தபட்ச ஸ்கோர் 254, நல்ல இன்னிங்ஸ்தான் பந்து வீச்சு நன்றாக இருந்தது 4,5 முறை பீட்டன் ஆனேன். 100, 100 ரன்களாக இலக்கு நிர்ணயித்து ஆடினேன்” என்றார்.மேலும் தன் ஆஃப் ஸ்பின் பவுலிங்கில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் பிரியான்ஷு மோலியா.தன் ஆசான் அமர்நாத் பற்றி மோலியா கூறுகையில், “வலையில் மோஹீந்தர் சார் என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார், பல்வேறு விதமான பயிற்சியை அவர் அளிக்கிறார். அவர் அளிக்கும் ஆலோசனைகளின் படி ஆடும்போது பேக்ஃபுட் பஞ்ச்கள் கவரில் அதிகம் ஆட முடிகிறது” என்றார்.மொஹீந்தர் அமர்நாத் இவரைப் பற்றிக் கூறும்போது, “இந்தப் பையனை முதன் முதலில் பார்க்கும்போது ஒரு ஸ்பெஷல் திறமை இருப்பதை உணர்ந்தேன். ஆட ஆட இன்னும் கூர்மையடைவார்” என்றார்.