10,000 ரன்கள் மட்டுமில்ல…விராட் கோலி நேற்று நிகழ்த்திய சாதனை
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக சதம்
இந்திய கேப்டன் 29 வயதான விராட் கோலி நேற்று ஒரே நாளில் ஏராளமான சாதனைகளை படைத்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். அதன் விவரம் வருமாறு:–
* ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 37 சதங்கள் பதிவு செய்துள்ளார். இதில் பேட்டிங்கில் 3–வது வரிசையில் இறங்கி அடித்த சதங்கள் மட்டும் 30. மூன்றாவது வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் 29 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அவரை கோலி முந்தியுள்ளார்.
*கேப்டனாக கோலியின் 15–வது சதம் இதுவாகும். கேப்டன் பொறுப்பில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்குக்கு (22 சதம்) அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார்.
* வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக ஆடிய மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் கோலி சதம் கண்டுள்ளார். 2017–ம் ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த ஆட்டத்தில் 111 ரன்களும், மூன்று நாட்களுக்கு முன்பு கவுகாத்தியில் நடந்த ஆட்டத்தில் 140 ரன்களும், தற்போதைய ஆட்டத்தில் 157 ரன்களும் குவித்துள்ளார். குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஒரு வீரர் ‘ஹாட்ரிக்’ சதம் நொறுக்குவது இது 11–வது நிகழ்வாகும். கோலி மட்டும் இச்சாதனையை இரண்டு முறை செய்திருப்பது கூடுதல் சிறப்பாகும். ஏற்கனவே இலங்கைக்கு எதிராகவும் தொடர்ச்சியாக 3 சதங்கள் (2012–ம் ஆண்டு) அடித்துள்ளார்.
* வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கோலியின் 6–வது சதம் இதுவாகும். இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர் என்ற மகத்தான பெருமையும் கோலியின் வசம் ஆனது. தென்ஆப்பிரிக்காவின் கிப்ஸ், அம்லா, டிவில்லியர்ஸ் ஆகியோர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தலா 5 சதங்கள் எடுத்துள்ளனர்.
*ஒரு நாள் கிரிக்கெட்டில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த சாதனையாளராகவும் கோலி வலம் வருகிறார். அந்த அணிக்கு எதிராக கோலி 29 ஆட்டங்களில் ஆடி 6 சதம் 9 அரைசதங்கள் உள்பட 1,684 ரன் எடுத்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 2–வது இடத்துக்கு (39 ஆட்டத்தில் 1,573 ரன்) தள்ளப்பட்டார்.
*தெண்டுல்கர் (6,976 ரன்), டோனி (4,410 ரன்) ஆகியோருக்கு அடுத்து இந்திய மண்ணில் 4 ஆயிரம் ரன்களை தாண்டிய வீரர்களின் வரிசையில் விராட் கோலி (4,127 ரன், 81 ஆட்டம்) நேற்று இணைந்தார்.
இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்தும் அசத்தல்
* ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் ‘டெல்லி சூறாவளி’ விராட் கோலி இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களையும் கடந்தார். இந்த ஆண்டில் 11 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 சதம், 3 அரைசதம் உள்பட 1,046 ரன்கள் குவித்துள்ளார். 2018–ம் ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த மற்றொரு வீரர் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ ஆவார். அவர் 22 ஆட்டத்தில் 1,025 ரன்கள் எடுத்துள்ளார்.
* ஒரு ஆண்டில் குறைந்த ஆட்டத்தில் (11 ஆட்டம்) ஆயிரம் ரன்களை எட்டிய வீரரும் கோலி தான். இதற்கு முன்பு இதே சாதனையை தென்ஆப்பிரிக்காவின் அம்லாவுடன் (15 ஆட்டம்) பகிர்ந்து கொண்டு இருந்தார்.
* ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் கோலி ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்ப்பது இது 6–வது முறையாகும். இந்த வகையில் சச்சின் தெண்டுல்கர் (7 முறை) முன்னணியில் இருக்கிறார்.
* இந்த ஆண்டில் மட்டும் கோலி 5 சதங்களை சுவைத்துள்ளார். ஒரு ஆண்டில் அவர் 5 மற்றும் அதற்கு மேல் சதங்கள் காண்பது இது 3–வது முறையாகும். வேறு எந்த வீரரும் செய்யாத ஒரு சாதனை இதுவாகும். தெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், டிவில்லியர்ஸ், அம்லா உள்ளிட்டோர் தலா 2 முறை இது போன்று செய்திருக்கிறார்கள்.
ஆட்டம் 213
இன்னிங்ஸ் 205
நாட்–அவுட் 36
ரன்கள் 10,076
சராசரி 59.62
சதங்கள் 37
அரைசதங்கள் 48
டக்–அவுட் 12
பவுண்டரி 944
சிக்சர் 110
DINASUVADU