வெஸ்ட் இண்டீஸ் பரிதாப தோல்வி …!தொடரும் சோதனை …!
வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் நேற்று பரிதாபமாக தோற்றது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. பாதுகாப்புப் பிரச்னையை காரணம் காட்டி முன்னணி வீரர்கள் வெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. இரண்டாம் கட்ட வீரர்கள் ஜேசன் முகமது தலைமையில் அங்கு சென்றுள்ளனர். கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடந்து வருகிறது.
முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை, 13.4 ஓவர்களில் 60 ரன்களுக்குள் சுருட்டியது பாகிஸ்தான். டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் குறைந்தபட்ச ஸ்கோர் இது. இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் நேற்று நடந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் 58 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். வெறும் 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார். ஹூசைன் தலட் 41 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 123 ரன்கள் எடுத்து பரிதாபமாகத் தோற்றது. அந்த அணியின் வால்டன் அதிகப்பட்சமாக 40 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 3 விக்கெட்டும், சதாப் கான், ஹூசைன் தலத் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.நடப்பு உலகசாம்பியன் ஆனா வெஸ்ட் இண்டீஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருவது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.