அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ சமீபத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்திலும் முகமது ஷமியின் பெயர் சேர்க்கப்படாமல் இருந்து வந்தது. இப்போது, அவரின் பெயர் பி பிரிவில் சேர்க்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ. 3 கோடி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பாகிஸ்தான் நாட்டுப் பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்துள்ளார், தன்னைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று அவரின் மனைவி ஜகான் அடுக்கடுக்கான புகார்களை சமீபத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக கொல்கத்தா போலீஸாரும் ஷமி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், பாகிஸ்தானிய பெண் அலிஷ்பா என்பவர் மூலம், முகமது பாய் என்பவரை துபாயில் சந்தித்து மேட்ச் பிக்சிங் செய்ய முகமது ஷமி பணம் பெற்றார் என்றும் அவரின் மனைவி ஜகான் தெரிவித்தார்.
மேலும், பிப்ரவரி மாதம் முகமது ஷமி துபாய் சென்றார் என்று கொல்கத்தா போலீஸார் தெரிவித்தனர். இதனால், பிசிசிஐ அமைப்புக்குச் சந்தேகம் வலுத்தது. இதன் காரணமாக, முகமது ஷமிக்கு வழங்கப்பட இருந்த ஊதிய ஒப்பந்தம், ஐபிஎல் வாய்ப்பு ஆகியவற்றை பிசிசிஐ தற்காலிகமாக நிறுத்திவைத்தது.
இந்நிலையில், முகமது ஷமியிடம் பிசிசிஐ அமைப்பின் ஊழல் ஒழிப்பு அமைப்பு இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் முகமது ஷமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை எனத் தெரியவந்தது.
இதையடுத்து, பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
”முகமது ஷமி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பிசிசிஐ அமைப்பின் ஊழல் ஒழிப்பு அமைப்பின் அதிகாரியும், முன்னாள் டெல்லி போலீஸ் ஆணையருமான நீர்ஜ் குமார் பிசிசிஐ விதிகளுக்கு உட்பட்டு விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில் முடிவின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிர்வாகிகள் குழுவிடம் அளித்தார். அந்த அறிக்கையில் ஷமி மீது கூறப்பட்ட புகார்கள் தவறானவை என்பதால், அவர் மீது எந்தவிதமான தடையும், விதிக்கப்படவில்லை. இதனால், அவருக்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஊதிய ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது. ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடலாம்”.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.