முதல இந்திய கிரிக்கெட்டுக்கு யோ-யோ டெஸ்ட்ட கண்டுபிடிச்சது யாரு?ரவி சாஸ்திரியை சாட்டையடியாக கேள்வி கேட்ட பிசிசிஐ பொருளாளர்
உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகக் குழுவுக்கு பிசிசிஐ பொருளாளர் அனிரூத் சவுத்ரி எழுதிய கடிதத்தில்,யோ-யோ டெஸ்ட் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இது எப்படி, யாரால், எப்போது நடைமுறைக்கு வந்தது என்று சோல்லாமலேயே கேப்டன் விராட் கோலியும் ரவிசாஸ்திரியும் கடுமையாக இதற்கு வக்காலத்து வாங்கினர், ஷமி, ராயுடு, சஞ்சு சாம்சன் ஆகியோரின் கிரிக்கெட் திறமைகளைக் கிடப்பில் போட்டு அவர்களை அணியிலிருந்து நீக்கியதையடுத்து யோ-யோ டெஸ்ட் வெளிப்படையானதா, அல்லது ‘பிடிக்காத’ வீரர்களை ஒதுக்கும் உபகரணமா என்ற கேள்விகள் கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்தன.
எனவே கிரிக்கெட் ரசிகர்கள் இன்று யோ-யோ டெஸ்ட் முறையை அன்று கடைபிடித்திருந்தால் இன்று வக்காலத்து வாங்கும் ரவிசாஸ்திரி மட்டுமல்ல கவாஸ்கர், விஸ்வநாத், வெங்சர்க்கார், சந்தீப் பாட்டீல் போன்ற திறமையான வீரர்கள் கூட இந்திய அணிக்கு ஆடியிருக்க முடியாது என்று முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டிக்கு பிசிசிஐ பொருளாளர் அனிருத் சவுத்ரி எழுதிய கடிதத்தில் எழுப்பிய விளாசல் கேள்விகள் வருமாறு:
இந்திய அணியில் வீரர்கள் தேர்வு அளவு கோலாக யோ-யோ டெஸ்ட் இருப்பதாக நான் தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன். இது சரியா? சரியென்றால், இந்த முடிவை எடுத்தது யார்? இதற்கான நியாய, தர்க்கம் என்ன?
பிசிசிஐ தேர்வு செய்யும் அணியில் யோ-யோ டெஸ்ட்டில் இவ்வளவு ஸ்கோர் செய்தால் தேர்வு என்பது எந்த அமைப்பில் எடுக்கப்பட்ட முடிவு?
எந்தக் கூட்டத்தில் இது முடிவெடுக்கப்பட்டது, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யார் யார்?
மிக முக்கியமாக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டவுடன் யாருக்கு இது தொடர்பு படுத்தப்பட்டது? இந்தியாவில் உள்ள முதல்தர கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் இது தெரியப்படுத்தப்பட்டதா? இந்தியாவில் லிஸ்ட் ஏ வீரர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதா? அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் தெரியப்படுத்தி வீரர்களிடம் இதனை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டதா?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.