மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பால் டேம்பரிங் குற்றச்சாட்டு! இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு தடை விதிக்கப்படுமா?
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் மீது பந்தை சேதப்படுத்தியதாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சந்திமாலுக்கு தடைவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்தியத்தீவுகள் சென்றுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் வென்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது.
2-வது ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்திருந்தது. 3-வது ஆட்டம் நேற்று தொடங்குவதாக இருந்தது. அப்போது, இலங்கை அணியின் வீரர்கள் அறைக்குச் சென்ற நடுவர்கள் ஆலீம் தார், இயான் கவுட் ஆகியோர் 2-வது நாள் ஆட்டத்தின் போது பந்தைச் சேதப்படுத்திவிட்டதாக இலங்கை வீரர்கள் மீது குற்றச்சாட்டு வைத்தனர். மேலும், இதனால், 3-வது நாளில் அதைப் பந்து பயன்படுத்தமாட்டோம், வேறு பந்தை பயன்படுத்துவோம் எனத் தெரிவித்தனர்.
இதற்கு இலங்கை வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, பந்தைச் சேதப்படுத்தும் குற்றச்சாட்டையும் மறுத்தனர். மேலும் பந்தை மாற்றினால், நாங்கள் விளையாடமாட்டோம் என்று, இலங்கை கேப்டன் சந்திமால், உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் ஓய்வு அறைக்குள் முடங்கினார்கள்.
இதையடுத்து, இலங்கை அணியின் மேலாளர் அசாங்கா குருசிங்கா, பயிற்சியாளர் சந்திகா ஹதுராசிங்கா, கேப்டன் சந்திமால் ஆகியோர் போட்டியின் நடுவர் ஜவஹல் சிறீநாத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், போட்டி 2 மணிநேரம் தாமதமாகத் தொடங்கியது.
ஆனால், பந்தை சேதப்படுத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேறு பந்து மாற்றப்பட்டு, மேற்கிந்தியத்தீவுகளுக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.
ஆனால், பந்தைச் சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துள்ளது. எந்த வீரரும் எந்தவிதமான தவற்றிலும் ஈடுபடவில்லை. ஆதாரமில்லாத எந்தக் குற்றச்சாட்டையும் கூறினால், வீரர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என இலங்கை நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், ஐசிசி ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை, மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில், பந்தைச் சேதப்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதலால், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் விதிமுறை மீறல்கள் நடந்திருப்பது தெரியவந்தால், போட்டியின் முடிவில் அறிவிக்கப்படும். இலங்கை கேப்டன் தினேஷ் சந்திமால் மீது ஐசிசி நடத்தை விதிமுறை மீறி பந்தை சேதப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: Sri Lanka captain Dinesh Chandimal has been charged for breaching Level 2.2.9 of the ICC Code of Conduct.
More to come… #WIvSL pic.twitter.com/EGU278hZug
— ICC (@ICC) June 17, 2018
இதையடுத்து, இந்தப் போட்டியின் முடிவில் தினேஷ் சந்திமாலுக்கு தடை விதிப்பது குறித்து ஐசிசி முடிவு செய்யும். மேலும், பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய 3வது கேப்டன் தினேஷ் சந்திமால் ஆவார். இதற்கு முன், கடந்த 2016-17-ம் ஆண்டு ஹோபர்ட்டில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளசிஸ் மீது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு கூறப்பட்டது.
2-வதாக கேப்டவுனில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டில் சிக்கி தண்டனைப் பெற்றார். இப்போது 3-வது கேப்டனாக இலங்கை வீரர் தினேஷ் சந்திமால் சிக்கியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.