‘பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆட வேண்டும்’கேப்டன் விராட் கோலி அறிவுரை…!!

Default Image
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில் 20 ஓவர் தொடர் நடக்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி மும்பையில் இருந்து இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது.
இதையொட்டி அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு நாங்கள் என்னென்ன தவறுகள் இழைத்தோம் என்பது குறித்து விவாதித்தோம். அப்போது நாங்கள் பெரிய அளவில் தவறு ஏதும் செய்யவில்லை என்பதை உணர்ந்தோம். எதுவெல்லாம் சரியாக அமையவில்லையோ? அது கொஞ்சம் அதிகமாகி விட்டது. இதனால் தான் தோல்விகள் ஏற்பட்டது. இது போன்ற சூழலில் ஒவ்வொருவரும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியது தேவையாகும்.
இப்போது நம்மிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களால் ஒவ்வொரு போட்டியிலும் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று கருதுகிறேன். எனவே பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் விளையாடி ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும். சூழ்நிலைக்கு தகுந்தபடி ஒருங்கிணைந்து விளையாடினால் தான் வெற்றி பெற முடியும். இந்த பயணத்தை பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் அனைவரும் எப்படி நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடுவது என்பதில் கவனம் செலுத்துவோம். பின்வரிசை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கும்’ என்றார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நீங்கள் எது சொன்னாலும், அதற்கு ‘ஆமாம் சாமி’ போடுபவரா? என்று கோலியிடம் கேள்வி எழுப்பிய போது சிரித்து விட்டார். ‘நீங்கள் இப்படி கேட்பதே எனக்கு மிகவும் புதுமையாக இருக்கிறது. ரவிசாஸ்திரியிடம் இருந்து மட்டுமே நான் எந்த விஷயத்திலும் வெளிப்படையான கருத்துகளை கேட்டு பெறுகிறேன். இது சரியல்ல, இதை வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று அவர் எதையும் மூடி மறைக்காமல் சொல்வார். அவரிடம் பெற்ற ஆலோசனைகளின் பேரில் நான் எனது ஆட்டத்தில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறேன். அணியை இந்த நிலைமைக்கு உயர்த்தியதில் அவரது பங்களிப்பும் அளப்பரியது. மக்கள் எதுவும் சொல்லலாம். ஆனால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாங்கள் நேரில் பார்க்கிறோம்.’ என்றார்.
2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக நாங்கள் 13 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறோம். அதனால் இனி அணியில் மாற்றம் செய்யும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம். அதற்குரிய நேரம் முடிந்து விட்டது. உலக கோப்பையில் விளையாட வாய்ப்புள்ள 15 வீரர்களையே தொடர்ந்து பயன் படுத்த முயற்சிப்போம். ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த அணியை களம் இறக்குவதில் கவனம் செலுத்துவோம்.
மூன்று வடிவிலான போட்டிகளிலும் நாங்கள் நிறைய முன்னேற்றம் கண்டு இருப்பதை பார்க்கிறேன். சமீபத்தில் வெளிநாட்டு மண்ணில் தோல்வி அடைந்தாலும், அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கும் வகையிலேயே இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மண்ணில் நடந்த போட்டிகளில் செய்த தவறுகளில் இருந்து நமது வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் என்று நம்புகிறேன். தவறுகளில் இருந்து பாடம் கற்று இருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட உதவும். டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் வித்தியாசமானது. உலக கோப்பைக்கு முன்பாக இந்தியா ஆடும் கடைசி டெஸ்ட் தொடர் இதுவாகும். அதனால் இந்த போட்டி மீது முழுமையாக கவனம் செலுத்துவோம்.இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்