பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்….இந்தியா-அயர்லாந்து இன்று மோதல்….!!

Default Image

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3-வது வெற்றியை ருசித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

10 அணிகள் இடையிலான பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் புரோவிடென்சில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜவேரியா கான் 52 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டு இருந்த பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அயர்லாந்து அணி தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்து இருக்கிறது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்துடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. அலிசா ஹீலி 53 ரன்னும், ராச்சல் ஹெய்ன்ஸ் 29 ரன்னும் விளாசினர். அடுத்து களம் புகுந்த நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.3 ஓவர்களில் 120 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. எனவே ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுசி பேட்ஸ் 48 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மெகன் ஸ்கட் 3 விக்கெட்டும், சோபி மொயின்ஸ், டெலிசா கிம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியா தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்று, முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. அதே சமயம் 2-வது தோல்வியை சந்தித்த நியூசிலாந்துக்கு அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது. இந்த போட்டியில் தாமதமாக பந்து வீசிய புகாரில் சிக்கியதால் நியூசிலாந்து அணி வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதமும், கேப்டனுக்கு 20 சதவீதமும் அபராதமாக ஐ.சி.சி. நடுவர் ரிச்சர்ட்சன் விதித்துள்ளார்.

புரோவிடென்சில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே நியூசிலாந்து, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்புடன் இந்திய வீராங்கனைகள் ஆயத்தமாக உள்ளனர். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்