பிறந்தநாள் கொண்டாட்டம்…வாழ்த்து மழையில் நனைந்த வீறு …!!
14 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய வீறு என்று செல்லமாக அழைக்கப்படும் சேவாக், 104 டெஸ்ட் போட்டிகளில் 8,556 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 23 சதங்களும், 32 அரைசதங்கள் அடங்கும். 251 ஒருநாள் போட்டிகளில் 8,273 ரன்கள் சேர்த்துள்ள சேவாக், 15 சதங்களும், 38 அரைசதங்களையும் விளாசியுள்ளார். 19 டி20 போட்டியில் விளையாடி 294 ரன்கள் சேர்த்துள்ளார் சேவாக்.
பாகிஸ்தானுக்கு எதிராக அந்நாட்டின் முல்தான் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் சேவாக்(309) அடித்த முச்சதத்தை யாராலும் மறக்க முடியாது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முச்சதம் அடித்தது, மேற்கிந்திய்தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததை ரசிகர்களால் மறக்க முடியாது.இந்நிலையில், சேவாக்கின் 40-வது பிறந்தநாளுக்கு சகவீரர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஹர்பஜன் சிங் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த நவீன தலைமுறையின் விவியன் ரிச்சர்ட்ஸ் விரேந்திர சேவாக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு சிறப்பானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், வீரேந்திர சேவாக் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், உடல் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிலவ வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வீரர் ஹேமங் பதானி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், வீரு எப்போதுமே எதிரணிகளுக்கு வைரஸ் போன்றவர். போட்டியின் போது எதிரணிகளை தனது பேட்டிங்கால் நிலைகுலைய வைத்து, அவர்களை அந்தச் சேதத்தில் இருந்து மீண்டுவருவதை கடினமாக்கிடுவார். வீரேந்திர சேவாகிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமண், மனோஜ் திவாரி, முகமது கைப், சட்டீஸ்வர் புஜாரா, ஆர்.பி.சிங், ஹேமங் பதானி, பிரக்யான் ஓஜா ஆகியோரும் சேவாக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர பிசிசிஐ அமைப்பு, ஐசிசி ஆகியவையும் சேவாகுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளன.
DINASUVADU