பிறந்தநாளில் சதம் அடித்து அசத்திய கம்பீர்..!!

Default Image

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது. மூத்த வீரர் கம்பீர் சதம் விளாசினார்.
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் 8 அணிகள் கால்இறுதியை எட்டின.இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த முதலாவது கால்இறுதியில் மும்பை–பீகார் அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி, மும்பை பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 28.2 ஓவர்களில் வெறும் 69 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் பாபுல் குமார் (16 ரன்), ரமத்துல்லா (18 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடர்ந்து ஆடிய மும்பை அணி 12.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. மும்பை அணியில் ரோகித் சர்மா 33 ரன்களும் (நாட்–அவுட்), அகில் ஹெர்வத்கர் 24 ரன்களும் எடுத்தனர்
மற்றொரு கால்இறுதியில் டெல்லி அணி, அரியானாவுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த அரியானா 49.1 ஓவர்களில் 229 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. டெல்லி அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியா 6 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் களம் இறங்கிய டெல்லி அணி கேப்டன் கவுதம் கம்பீரின் சதத்தின் (104 ரன், 72 பந்து, 16 பவுண்டரி) உதவியுடன் 39.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட கம்பீர் நடப்பு தொடரில் அடித்த 2–வது சதம் இதுவாகும். அவருக்கு நேற்று 37–வது வயது பிறந்தது. பிறந்த நாள் பரிசாக இந்த செஞ்சுரி அமைந்திருக்கிறது. சச்சின் தெண்டுல்கர், ஷிகர் தவான் உள்ளிட்ட பிரபலங்கள் கம்பீருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் இன்று நடக்கும் கால்இறுதி ஆட்டங்களில் மராட்டியம்–ஜார்கண்ட், ஆந்திரா–ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஜார்கண்ட் அணிக்காக டோனி கால்இறுதியில் விளையாடுவார் என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால் தற்போது இந்த போட்டியில் ஆடுவதில்லை என்று டோனி முடிவு எடுத்துள்ளார்.
ஜார்கண்ட் அணியின் பயிற்சியாளர் ராஜீவ் குமார் கூறுகையில், ‘ஜார்கண்ட் அணி சிறப்பாக விளையாடி கால்இறுதியை எட்டியுள்ளது. இந்த நிலைமையில் அணியுடன் இணைவது சரியாக இருக்காது என்று டோனி நினைக்கிறார். அது மட்டுமின்றி சரியான கலவையில் அமைந்துள்ள அணிக்குள், ஒரே ஒரு ஆட்டத்திற்காக மாற்றத்தை ஏற்படுத்த அவர் விரும்பவில்லை’ என்றார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்