பந்தை சேதப்படுத்திய விவகாரம் இலங்கை கேப்டன் சந்திமல் விளையாட தடை..!
வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.
இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி கேப்டன் சந்திமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதையடுத்து அந்த போட்டி முடிந்தபின் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையின் முடிவில் சந்திமல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2 தகுதி நீக்க புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக விளையாடப்பட உள்ளது.
மேலும் போட்டிக்கான மொத்த ஊதியமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தென்னாப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.