இது குறித்து மிகுந்த வேதனையுடன் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் அதில் கூறுகையில், இந்திய கால்பந்து அணிக்கு மக்களும்,ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வீடியோவைப் பார்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சுனில் சேத்ரியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் கிராண்ட்மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, குர்னல் பாண்டயா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், இளைஞர்களே வாருங்கள், கால்பந்துப் போட்டி நடக்கும் அரங்குகளை நிரப்புங்கள். நமது நாட்டு அணி எங்கு விளையாடினாலும் ஆதரவுதெரிவிப்போம். சுனில் சேத்ரியின் கருத்தை ஆதரிக்கிறேன்.
இந்திய கால்பந்து அணிக்கு நாம் அனைவரும் இந்த நேரத்தில் ஆதரவு அளிப்பது முக்கியமான ஒன்றாகும். நமது நாட்டுக்காகப் பதக்கங்களையும், கோப்பைகளையும் வெல்வதற்காக நமது தடகள வீரர்கள்,வீராங்கனை கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். அவர்கள் நாட்டுக்காகக் கனவு காண்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக ரசிகர்கள் இருக்க வேண்டும், அப்போதுதான் அவர்களை ஊக்குவிக்க முடியும். அதுதான் சிறந்த ஊக்கமாக இருக்கும். நம்முடைய வீரர்கள் அடுத்துவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் கூறுகையில், நான் உண்மையான கால்பந்து ரசிகன். கால்பந்து போட்டியை ஆதரிப்பவன். அனைவரும் நமது கேப்டன் சுனில் சேத்ரி வேண்டுகோளை ஏற்று கால்பந்துப் போட்டிக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்திய கால்பந்து அணி கடினமான முயற்சிகள் எடுத்து வளர்ந்து வருகிறது. நாம் முழுமையாக ஆதரவு அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், எனக்குக் கால்பந்து டிக்கெட் கிடைக்குமா, கிடைத்தால் நேரில் சென்று பார்ப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.