சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி, எம்எஸ் தோனி, ரோகித் சர்மா!நடக்குமா?
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எம்எஸ் தோனி, ரோகித் சர்மா, ஆகியோர் இங்கிலாந்துத் தொடரில் பல்வேறு சாதனைகளைச் செய்ய வாய்ப்பு இருக்கிறது.
இந்திய அணிக்கு அயர்லாந்து அணியுடன் டி20 போட்டியில் பங்கேற்கும் இந்தப் போட்டி 100-வது டி20 போட்டியாகும். பல்வேறு மைல்கல்லை இந்த 100 போட்டிகளில் இந்திய அணி தோனி தலைமையிலும், கோலி தலைமையிலும் கடந்து வந்துள்ளது. இதில் டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையில் வென்றது இந்திய அணி என்பது முத்தாய்ப்பாகும்.
இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் முதலில் அயர்லாந்து அணியுடன் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின், இங்கிலாந்து அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால், கடந்த முறை இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4-1 என்ற தொடரை இழந்துவந்தது, விராட் கோலியும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினால், இந்தத் தொடரை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக வீரர்கள் மிகுந்த கவனத்துடன், அனைத்துக் கலவையும் கொண்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு 17 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. 54 இன்னிங்ஸ்களில் 1983 ரன்கள் குவித்து விராட் கோலி சர்வதேச அளவில் 4-வது இடத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் விராட் கோலி 17 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் குறைந்த போட்டியில் 2 ஆயிரம் ரன்கள் எட்டிய வீரர் எனும் சாதனையைப் படைப்பார்.
இதற்கு முன் 66 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை மெக்கலம் எட்டியிருந்தார். விராட் கோலி 55-வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டும்போது புதியசாதனையை படைப்பார்.
இதற்கு முன், 2 ஆயிரம் ரன்களை நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில்(2,271),பிரன்டென் மெக்கலம்(2,140) எடுக்க, பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 1989 ரன்களை எடுத்துள்ளார்.
அடுத்ததாக எம்எஸ் தோனி, ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 33 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இதை தோனி எட்டும் பட்சத்தில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார். சர்வதேச அளவில் 12-வது வீரர் என்ற பெயர் பெறுவார்.
இந்திய வீரர்களில் சச்சின் (18,426), கங்குலி(11,363), ராகுல் டிராவிட் (10,899) ரன்கள் சேர்த்து சாதனை புரிந்துள்ளனர். தோனிக்கு அடுத்த இடத்தில் 10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு விராட் கோலிக்கு இன்னும் 412 ரன்கள் தேவைப்படுகிறது. தற்போது விராட்கோலி 9,588 ரன்களுடன் உள்ளார்.
அதேசமயம், ரோகித் சர்மா சர்வேதச போட்டிகள் அதாவது டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 வகையான போட்டிகளிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் அவருக்கு 75 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. டி20 போட்டியில் 2 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு 148 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது