கத்துக்குட்டி அணியிடம் செமையாக அடிவாங்கிய உலகின் நம்பர் ஒன் அணி!வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஸ்காட்லாந்து
கத்துக்குட்டி ஸ்காட்லாந்து அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடையச் செய்தது .
இங்கிலாந்து அணியை முதல்முறையாக வீழ்த்தி வரலாற்று வெற்றியை ஸ்காட்லாந்து அணி பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இதற்கு முன் உலகக்கோப்பைப் போட்டியில் 14 அணிகள் என்ற நிலையில், இருந்து 10 அணிகளாகக் குறைத்த ஐசிசிக்கு ஸ்காட்லாந்து தன்னாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று அழுத்தமான செய்தியை பதிவு செய்துள்ளது.
அனுபவம் நிறைந்த வீரர்கள், சர்வதேச தரத்திலான பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் இருந்தபோதிலும், அவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் அளிக்கும் வகையில், ஸ்காட்லாந்து வீரர்களின் பந்துவீச்சும், பேட்டிங்கும் இருந்தது பாராட்டுக்குரியது.
குறிப்பாக ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன் மெக்லியோட் 3-வது வீரராக களமிறங்கி இறுதி வரைஆட்டமிழக்காமல் 94 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்ஸர்களும், 16 பவுண்டரிகளும் அடங்கும். அற்புதமான பேட்டிங்கையும், இங்கிலாந்துக்கு எதிராக முதல் சதத்தையும் பதிவு செய்த மெக்லியோட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், கேப்டன் கோட்ஸியர்(58ரன்கள்), முன்ஸே(55), கிராஸ்(48) ஆகியோர் குறிப்பிடத்தக்க அளவுக்கு ரன்கள் சேர்த்து இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை ஸ்காட்லாந்து வீரர்கள் சுமாராகப் பந்துவீசியபோதிலும், முக்கியத் தருணங்களில் விக்கெட் வீழ்த்தத் தவறவில்லை. அந்த அணி வீரர் வாட் வீழ்த்திய முக்கிய 3 விக்கெட்டுகளும், பெரிங்டனின் 2விக்கெட்டுகளும் ஆட்டத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது.
டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்து கூட பெறாத ஸ்காட்லாந்து அணி, ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது அந்த அணியின் கிரிக்கெட் பாதையில் முக்கிய மைல்கல்லாகவே பார்க்க வேண்டும். இந்த வெற்றி ஸ்காட்லாந்து அணியை அடுத்த கட்டதுத்துக்கு உயர்த்தும்.
சர்வதேச போட்டிக்கான அந்தஸ்து ஸ்காட்லாந்து அணிக்கு கிடைத்தபின், இங்கிலாந்து அணியை முதன்முதலாக வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.
ஸ்காட்லாந்தின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அந்த அணி 371 ரன்கள் சேர்த்ததே அந்த அணியின் மிக அதிகபட்சமான ஸ்கோர் ஆகும். இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 45 பவுண்டரிகளையும், 8 சிக்ஸர்களையும் விளாசியது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று அசத்திய பேர்ஸ்டோ இந்தப் போட்டியிலும் கலக்கினார். அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ 59 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளும் அடங்கும். அலெக்ஸ் ஹேல்ஸ்(52), மொயின் அலி(46) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினார்கள். மற்ற வீரர்களின் பேட்டிங் ஏமாற்றம் தரும் விதத்திலேயே அமைந்திருந்தது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் நேற்றுமுன்தினம் எழுதிய கட்டுரையில் கூட இங்கிலாந்து அணி குறித்து தெரிவிக்கையில், ஸ்திரமில்லாத பேட்டிங்கும், வேகப்பந்துவீச்சில் பலவகைகள் இல்லாமல் இருப்பதால், இந்திய அணி டெஸ்ட் தொடரை எளிதாக வெல்லமுடியும் என்று தெரிவித்து இருந்தார். அவரின் வார்த்தை ஸ்காட்லாந்து போட்டியிலேயே பலித்துவிட்டது என்றே கூறலாம்.
முதல் இரு விக்கெட்டுகளுக்கு அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை நடுவரிசையில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறவிட்டனர். இதனால், கடைசி வரிசையில் களமிறங்கிய வீரர்களுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டு தோல்வியைத் தழுவியது.
ஐபிஎல் போட்டியில் பல்வேறு அணிகளில் இடம் பெற்று சொதப்பலாக பேட்டிங், பந்துவீச்சில் ஈடுபட்ட வீரர்கள் இந்த ஆட்டத்திலும் அதே பணியைச் செய்தனர். குறிப்பாகச் சென்னை சூப்பர் கிங்ஸில் இடம் பெற்ற ஷாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், பிளங்கெட், டேவிட் வில்லே, மோர்கன் ஆகியோர் இந்த போட்டியிலும் சொதப்பினார்கள்.
பந்துவீச்சிலும் மிகமோசமாக செயல்பட்ட இங்கிலாந்து வீரர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஒவருக்கு 7.5 ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.
ஸ்காட்லாந்துடன் ஒரே ஒருநாள் போட்டி விளையாடுவதற்காக இங்கிலாந்து வந்திருந்தது. டாஸ்வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பீல்டிங் செய்ய தீர்மானித்தார்.
முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தது. 372 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்து 6 ரன்களில் தோல்வியைத் தழுவியது.
ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கோட்ஸியர், கிராஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். கோட்ஸியர் 58 ரன்களிலும் கிராஸ் 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து பெரிங்டன், மெக்லியோட் ஜோடி சிறப்பாக பேட் செய்தனர். பெரிங்டன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய முன்சே 51 ரன்கள் சேர்த்து வெளியேறினார். முன்சே, மெக்லியோட் கூட்டணி 107 ரன்கள் சேர்த்தனர். 140 ரன்கள் சேர்த்து மெக்லியோட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ராஷித், பிளங்கெட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
371 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய்(34), பேர்ஸ்டோ(105), ஹேல்ஸ்(52) ஆகியோர் கூட்டணி நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது. ஆனால், அதன்பின் வந்த நடுவரிசை வீரர்கள் பொறுப்பற்ற பேட்டிங்கால் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக ரூட்(29),மோர்கன்(20),பில்லிங்ஸ்(12), வில்லி(7) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். பிளங்கெட் 47 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்து 6 ரன்களில் தோல்வியைத் தழுவியது.
ஸ்காட்லாந்து அணித் தரப்பில் வாட் 3 விக்கெட்டுகளையும், இவான்ஸ், பெரிங்டன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.