கண்டிப்பா நான் அஷ்வினுக்கு எதிராக செயல்படுவேன்…!செயலால் வெற்றியடைவேன்!திமிராக பதில் கூறிய முஜீப்
ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் ஜத்ரன் சவால் ,ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வினிடம் கற்ற வித்தையை எல்லாம், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தி நெருக்கடி அளிப்பேன் என்று விடுத்துள்ளார்.
இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட பின் பங்கேற்கும் முதலாவது போட்டி இதுவாகும்.
ஏற்கெனவே வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் 3-0 என்று கைப்பற்றி அதிர்ச்சி அளித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. பேட்டிங்கில் சவால்விடுக்கும் வகையில் வலிமையான வீரர்கள் இல்லாவிட்டாலும் கூட பந்துவீச்சில் ரஷித்கான், முஜீப் ஜத்ரன் உள்ளிட்டோர் இருப்பது சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் பெங்களூரு மைதானத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கும். இதற்காக ஆப்கானிஸ்தான் அணியினர் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 17 வயதான சுழற்பந்துவீச்சாளர் முஜீப் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார். அப்போது, வலைப்பயிற்சியின் போது, இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினிடம் பல்வேறு நுணுக்கங்களையும், விஷயங்களையும் கற்றுக்கொண்டுள்ளார். ஆதலால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சவாலாக இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முஜீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
”கிங்ஸ் லெவன் அணியில் இருக்கும்போது, பயிற்சியின் போது பெரும்பாலான நேரத்தை அஸ்வினுடன் செலவிட்டேன். அவர் அளித்த பல்வேறு அறிவுரைகள், பந்துவீச்சில் சொல்லிக்கொடுத்த நுணுக்கங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. எந்த இடத்தில் பந்து வீசினால் பேட்ஸ்மேன் திணறுவார், புதிய பந்தில் எப்படி பந்து வீசுவது, பந்தை தேய்ந்துவிட்டால் எப்படிச் சுழலவிடுவது போன்ற பல்வேறு யுத்திகளைக் கற்றேன். குறிப்பாக ஆப்ஸ்பின்னை தெளிவாக அஸ்வினிடம் கற்று இருக்கிறேன்.
நான் இதுநாள்வரை உள்நாட்டு முதல்தரப் போட்டிகளில் விளையாடாவிட்டாலும் கூட 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் விளையாடி இருக்கிறேன். இதனால், பயமின்றி விளையாடுவேன். டெஸ்ட் போட்டி குறித்து எந்தவிதமான அச்சமும் இல்லை.
எனக்கு இருந்த அனைத்து பயத்தையும் ஐபிஎல் போட்டி தீர்த்துவிட்டதால், அதற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நெருக்கடியான சூழலை எப்படிக் கையாள்வது, எதிரணிக்கு எதிராக பந்துகளை எப்படி வீசுவது என்பதை ஐபிஎல் போட்டியில் கற்றுக்கொண்டதால், எந்த அணியை பற்றியும் கவலையில்லை.”
இவ்வாறு முஜீப் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.