இலங்கை அணிக்கு 462 ரன்கள் இலக்கு….
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
முதலாவது டெஸ்ட்
இலங்கை–இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 342 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 107 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 203 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது.
139 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2–வது நாள் ஆட்டம் முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்து இருந்தது. ரோரி பர்ன்ஸ் 11 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 26 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இலங்கை அணிக்கு 462 ரன்கள் இலக்கு
நேற்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி தேனீர் இடைவேளைக்கு பிறகு 2–வது இன்னிங்சில் 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. 2–வது சதம் கண்ட தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் 280 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 146 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் தில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் 40 வயதான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 93 டெஸ்ட் போட்டியில் மொத்தம் 433 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இடக்கை பவுலர் என்ற பெருமையுடன் ரங்கனா ஹெராத் ஓய்வு பெறுகிறார்.
பின்னர் 462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கருணாரத்னே 7 ரன்னுடனும், குஷால் சில்வா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4–வது நாள் ஆட்டம் நடக்கிறது. காலே மைதானத்தில் இங்கிலாந்து அணி இதுவரை 4 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறது. இதில் 2 ஆட்டத்தில் தோல்வியும், 2 ஆட்டத்தில் டிராவும் கண்டுள்ளது. இந்த மைதானத்தில் முதல் முறையாக இங்கிலாந்து அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உருவாகி உள்ளது.
dinasuvadu.com