இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கேலிக்குரியது : ஜேம்ஸ் ஆண்டர்சன்..!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் அட்டவணை கேலிக்குரிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது’ என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (ஜூலை) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டி தொடர் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் செப்டம்பர் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுவதற்கு தயாராகும் வகையில் 6 வார காலம் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் அட்டவணை குறுகிய கால கட்டத்தில் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக தோள்பட்டையில் பிரச்சினை இருந்து வருகிறது. அவ்வப்போது சிகிச்சை எடுத்து விளையாடி வருகிறேன். இந்த முறை அப்படி இருக்க முடியாது என்பதால் தொடர் சிகிச்சைக்கு தயாராகி இருக்கிறேன். போதுமான ஓய்வும், உடற்பயிற்சியும் இருந்தால் நான் வலுப்பெற்று விடுவேன்.
இந்திய அணி, தனது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 6 வாரத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டு இருப்பது கேலிக்குரியதாகும். இது இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு சவாலானதாகவும், அதிக நெருக்கடி கொடுப்பதாகவும் இருக்கும். இது மாதிரி போட்டி அட்டவணையை அமைத்து இருப்பது வெட்கக்கேடானது. இதுபோன்ற பொருத்தமற்ற போட்டி அட்டவணையால் லான்காஷையர் அணிக்காக சில ஆட்டங்களில் நான் விளையாட முடியாத நிலை ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பெய்லிஸ் கருத்து தெரிவிக்கையில், ‘6 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன், நாங்கள் விளையாட வேண்டும் என்பது உண்மையிலேயே சவாலானதாகும். இது பந்து வீச்சாளர்கள் அனைவருக்கும் நெருக்கடியாக இருக்கும். இந்த போட்டி தொடருக்கு முன்பாக முழு உடல் தகுதியை எட்டுவதற்காக ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு போதிய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தடுமாற்றம் இருக்கிறது. எனவே இங்கிலாந்து பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. இதேபோல் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி தொடரை வெல்ல வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்தார்