இஷ் சோதிக்கும் நீல் வாக்னருக்கும் ஷார்ட் பிட்ச் பந்து வீச்சு சவால், ஸ்பின்னர்களுக்கு நெருக்கமான களவியூகம் என்று அனைத்தும் கடைசி நிமிடங்களில் செய்யப்பட்டது. இதற்குப் பலனும் கிடைத்தது, சில எட்ஜ்களில் சுமார் 3 கேட்ச்களாகவது தவறவிடப்பட்டது, சில பந்துகள் காற்றில் கைகளுக்கு அருகில் தாண்டிச் சென்று வலியை அதிகரித்தது.
ஸ்டூவர்ட் பிராட் இந்த டெஸ்ட் போட்டியில் அபாரமாக வீசினார், அதனி 2வது இன்னிங்சிலும் தொடர்ந்து முதல் 2 பந்துகளிலேயே விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்துக்கு வெற்றி நம்பிக்கை அளித்தார். ஆனால் நியூஸிலாந்தின் டாம் லேதம் (83), கொலின் டி கிராண்ட்ஹோம் (45) முதலில் முக்கியப் பங்களிப்பு செய்ய கீழ் வரிசை உறுதியுடன் ஆட இங்கிலாந்து வெற்றி பறிக்கப்பட்டது, நியூஸிலாந்து 1984-க்குப் பிறகு இங்கிலாந்தை தங்கள் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
ஜேம்ஸ் வின்ஸ், ராஸ் டெய்லர் (13) கொடுத்த கேட்சை 3வது ஸ்லிப்பில் விட்டார், ஆனால் 13 ரன்களில் டெய்லர், இடது கை ஸ்பின்னர் ஜேக் லீச்சிடம் வெளியேறினார். கொலின் டி கிராண்ட்ஹோமுக்கும், சோதிக்கும் மார்க் ஸ்டோன்மேன் கேட்ச்களை விட்டார். கிராண்ட்ஹோம் 6 ரன்களிலும் சோதி 0-விலும் அப்போது இருந்தனர். இது ஓரளவுக்கு கடினமான வாய்ப்பே என்றாலும் இருவரும் இணைந்து சுமார் 44 ஓவர்களை ஆடியது விட்டது கேட்ச்கள் அல்ல மேட்ச் என்பதை உணர்த்தியிருக்கும்.
இன்று காலை ஸ்டூவர்ட் பிராட் அபாரமாகத் தொடங்கினார், ஆனால் தொடக்க வீரர் ராவல் (17) ஹாஃப்வாலி பந்தை லெக் திசையில் மிட்விக்கெட்டில் நேராக ஸ்டோன்மேனிடம் கேட்ச் கொடுத்தார், இது ஒரு வார்ம்-அப் பந்துதான் அதற்கே விக்கெட்! ஆனால் அடுத்த பந்து உலகின் சிறந்த பேட்ஸ்மென்களின் ஒருவரான நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு போட்டது அற்புதமான பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனது கோல்டன் டக்கில் வெளியேறினார் கேன் வில்லியம்சன்.
ஹாட்ரிக் பந்தை டெய்லர் நிறுத்தினார். டெய்லருக்கு கேட்சை வின்ஸ் விட்டாலும் அவர் நீடிக்கவில்லை இடது கை ஸ்பின்னர் ஜேக் லீச் (2/61) பந்தை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார்.
ஹென்றி நிகோல்ஸ் (13), ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை தளர்வான ஒரு டிரைவ் ஆடி ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். பி.ஜே.வாட்லிங்கும் 19 ரன்களில் மார்க் உட் பந்தை மிகவும் மோசமாக பிளிக் ஆடி கேட்ச் ஆகி வெளியேறினார்.
டாம் லேதம் ஒரு முனையில் 207 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து தாக்குப் பிடித்து வந்த நிலையில் ஸ்வீப் ஷாட்டில் ஜேக் லீச்சிடம் வீழ்ந்தார். வின்ஸ் இம்முறை அபாரமான டைவிங் கேட்ச் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகுதான் இங்கிலாந்து கேட்ச்களை விட கொலின் டி கிராண்ட்ஹோம், சோதி கூட்டணி அமைத்தனர். தேநீர் இடைவேளையின் போது 8 விக்கெட்டுகள் விழுந்திருக்க வேண்டியது 6 விக்கெட்டுகளுடன் நியூஸிலாந்து நம்பிக்கையுடன் சென்றது. டிகிராண்ட் ஹோம் மார்க் உட்டிடம் ஆட்டமிழந்தார், ஆனால் நீல் வாக்னர் 103 பந்துகள் வெறுப்பேற்றி கடைசியில் ஆட்டமிழந்தாலும் இங்கிலாந்து வெற்றி பெற முடியாததை சோதியும் இவரும் உறுதி செய்தனர். 256/8 என்றுடன் டிரா ஆனது, நியூஸிலாந்து தொடரை வென்றது.ஆட்ட நாயகன் டிம் சவுதி, தொடர் நாயகன் டிரெண்ட் போல்ட் பெற்றனர்.