இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? – 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்…!!

Default Image

இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் இன்று தொடங்குகிறது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் கோலோச்சி, இலங்கை மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வெல்வதில் இங்கிலாந்து தீவிரம் காட்டுகிறது.

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ காயமடைந்ததால் காலே டெஸ்டில் அறிமுக விக்கெட் கீப்பராக பென் போக்ஸ் சேர்க்கப்பட்டார். சதம் அடித்து சாதனை படைத்த பென் போக்ஸ், விக்கெட் கீப்பிங்கில் 3 கேட்ச், ஒரு ரன்-அவுட் செய்து ஆட்டநாயகனாக ஜொலித்தார். பேர்ஸ்டோ காயத்தில் இருந்து குணமடைந்து நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் பேர்ஸ்டோ- பென் போக்ஸ் ஆகியோரில் யாருக்கு இடம் என்ற குழப்பம் ஏற்பட்டது.

இந்த சூழலில் அணியில் மாற்றம் இல்லை, பென் போக்ஸ் அணியில் நீடிப்பார் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெளிவுப்படுத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக பேர்ஸ்டோ வியக்கத்தக்க வகையில் பங்களிப்பை அளித்து வருகிறார். ஆனாலும் இங்குள்ள சீதோஷ்ண நிலையில் பென் போக்சே விக்கெட் கீப்பிங்குக்கு பொருத்தமானவராக இருப்பார் என்றும் ஜோ ரூட் குறிப்பிட்டார். ஆடுகளம் நன்கு உலர்ந்து சுழற்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் காணப்படுவதால், 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதலை தொடுக்க இங்கிலாந்து காத்திருக்கிறது. பேட்டிங்கில் மொயீன் அலி சரியாக ஆடாதால் இந்த டெஸ்டில் 3-வது வரிசையில் ஜோஸ் பட்லரை இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொயீன் அலி பின்வரிசைக்கு தள்ளப்படுகிறார்.

முதலாவது டெஸ்டில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. காயம் காரணமாக கேப்டன் சன்டிமால் இந்த டெஸ்டில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சுரங்கா லக்மல் அணியை வழிநடத்த இருக்கிறார். மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் ஓய்வு பெற்று விட்டதால், அவரது இடத்தில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் புஷ்பகுமாரா இறங்குகிறார். முந்தைய டெஸ்டில் மேத்யூஸ் (இரண்டு இன்னிங்சிலும் அரைசதம்) தவிர வேறு யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்க வேண்டியது அவசியமாகும்.

இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது இதுவே முதல் முறையாகும். இலங்கை அணி இங்கு 6 டெஸ்டில் விளையாடி 1-ல் வெற்றியும், 2-ல்தோல்வியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது. போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், கீடான் ஜென்னிங்ஸ், ஜோஸ் பட்லர், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, பென் போக்ஸ், சாம் குர்ரன், அடில் ரஷித், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இலங்கை: கவ்ஷல் சில்வா, கருணாரத்னே, ரோஷன் சில்வா, குசல் மென்டிஸ், மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, தில்ருவான் பெரேரா, சுரங்கா லக்மல் (கேப்டன்), அகிலா தனஞ்ஜெயா, மலின்டா புஷ்பகுமாரா.காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
fever (1)
edappadi palanisamy TVK VIJAY
Udhayanithi Stalin
Edappadi Palanisamy
Irfan - Youtuber
Annamalai (12) (1)