இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை அணி திணறல்….தோல்வியை தவிர்க்க போராட்டம்…!!
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 5 ஓவருக்குள் இங்கிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து ஆடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 12 ரன்னில் தில்ருவான் பெரேரா பந்து வீச்சில் போல்டு ஆனார். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 80.4 ஓவர்களில் 346 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. பென் போக்ஸ் 65 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 124 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அகிலா தனஞ்ஜெயா 6 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் குஷால் சில்வா 4 ரன்னிலும், தனஞ்ஜெயா டி சில்வா 1 ரன்னிலும், குசல் மென்டிஸ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ், கருணாரத்னேவுடன் இணைந்தார். இந்த ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடி 4-வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தது. ஸ்கோர் 103 ரன்னை எட்டிய போது தொடக்க ஆட்டக்காரர் கருணாரத்னே (57 ரன்கள்) அடில் ரஷித் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பென் போக்சால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரோஷன் சில்வா 37 ரன்னில் அவுட் ஆனார்.
நிலைத்து நின்று ஆடிய மேத்யூஸ் 137 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 88 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.ஆனார். அடுத்து களம் கண்ட தில்ருவான் பெரேரா 2 ரன்னில் ஜாக் லீச் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 65.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் அத்துடன் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. டிக்வெல்லா 27 ரன்னுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டும், மொயீன் அலி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இலங்கை அணி வெற்றிக்கு மேலும் 75 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணியின் கைவசம் 3 விக்கெட்டுகள் உள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இன்றைய ஆட்டம் 15 நிமிடம் முன்னதாக தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியை தவிர்க்க இலங்கை அணி தொடர்ந்து போராடும். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது.
dinasuvadu.com