ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா….பிளிஸ்சிஸ், மில்லர் சாதனை…!!

Default Image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பிளிஸ்சிஸ், மில்லர் சதம் அடித்ததோடு பார்ட்னர்ஷிப்பில் சாதனை படைத்தனர்.

ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 55 ரன்களுக்குள் குயின்டான் டி காக் (4 ரன்), ரீஜா ஹென்ரிக்ஸ் (8 ரன்), மார்க்ராம் (32 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், டேவிட் மில்லர் கைகோர்த்து அணியை ஆபத்தில் இருந்து மீட்க நிதானமாக ஆடினர். பிளிஸ்சிஸ் 29 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரி கோட்டை விட்டார். மில்லர் 41 ரன்களில் எல்.பி.டபிள்யூ. கண்டத்தில் இருந்து தப்பினார். தென்ஆப்பிரிக்க அணி 25.4 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. இதன் பிறகு இருவரும் படிப்படியாக ரன்வேகத்தை தீவிரப்படுத்தினர். இறுதி கட்டத்தில் பந்தை அடிக்கடி எல்லைக்கோட்டை நோக்கி ஓட வைத்தனர். இதனால் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. பிளிஸ்சிஸ் தனது 10–வது சதத்தையும், மில்லர் 5–வது சதத்தையும் நிறைவு செய்தனர். அத்துடன் மிட்செல் ஸ்டார்க்கின் ஒரு ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 20 ரன்கள் விளாசி மிரள வைத்தனர். ஸ்டார்க் தனது வாழ்க்கையில் வீசிய மோசமான ஓவர் அது தான். 49–வது ஓவரில் அதாவது அணியின் ஸ்கோர் 307 ரன்களாக உயர்ந்த போது பிளிஸ்சிஸ் 125 ரன்களில் (114 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.

மில்லர் – பிளிஸ்சிஸ் ஜோடி 4–வது விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்து புதிய சாதனை படைத்தது. உலக சாம்பியனான ஆஸ்திரேலியா, ஒரு விக்கெட்டுக்கு விட்டுக்கொடுத்த ‘மெகா’ பார்ட்னர்ஷிப் இது தான். இதற்கு முன்பு இலங்கையின் மார்வன் அட்டப்பட்டு, ஜெயசூர்யா ஆகியோர் 2003–ம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்ததே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது. அதை 15 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க ஜோடி மாற்றி அமைத்து இருக்கிறது.

ஆஸ்திரேலிய பவுலர்களை வறுத்தெடுத்த டேவிட் மில்லர் கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். மில்லர் 139 ரன்கள் (108 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்தார். ஒரு நாள் போட்டியில் அவரது அதிகபட்சம் இதுவாகும். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 130 ரன்கள் திரட்டினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய மண்ணில் தென்ஆப்பிரிக்கா 300 ரன்களை கடந்தது இதுவே முதல் முறையாகும்.

அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியாவுக்கும் முதல் 3 விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. கிறிஸ் லின் (0), கேப்டன் ஆரோன் பிஞ்ச் (11 ரன்), டிராவிஸ் ஹெட் (6 ரன்) ஆகியோர் தாக்குப்பிடிக்கவில்லை. இதன் பின்னர் ஷான் மார்சும், மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். ஸ்கோர் 146 ரன்களை எட்டிய போது ஸ்டோனிஸ் 63 ரன்களில் (5 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். ஷான் மார்ஷ் தனது பங்குக்கு சதம் (106 ரன், 102 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்த போதிலும் பலன் இல்லை. மார்சின் வெளியேற்றத்திற்கு பிறகு ஆட்டம் தென்ஆப்பிரிக்கா பக்கம் திரும்பியது. மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 35 ரன்களில் (27 பந்து, 3 பவுண்டரி) வீழ்ந்தார்.

50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியால் 9 விக்கெட்டுக்கு 280 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டெயின், ரபடா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2–1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2–வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன.

தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் கூறுகையில், ‘எங்களது சிறந்த ஆட்டம் வெளிப்பட்டு இருக்கிறது. உலக கோப்பை ஆட்டம் போல் நினைத்து விளையாடினோம். ஒரு கட்டத்தில் நானும், மில்லரும் 240 ரன்களுக்கு மேல் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம். ஆனால் மில்லரின் அதிரடியால், இது போன்ற பெரிய ஸ்கோரை எட்டினோம். கடந்த முறை இங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றினோம். தற்போது ஒரு நாள் தொடரை வென்றுள்ளோம். அதனால் இந்த இடம் எங்களது மனதில் நீண்ட காலம் நினைவில் நிற்கும்’ என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘35 ஓவர்கள் வரை நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். கடைசி கட்டத்தில் அவர்களின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர்’ என்றார்.இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் போட்டி வருகிற 17–ந்தேதி காரராவில் நடக்கிறது.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்