அபார வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி!வெறும் கடமைக்காக ஆடி தோல்வியடைந்த வேர்ல்டு லெவன் அணி!

Default Image

வேர்ல்டு லெவன் அணியை லண்டனில் நேற்று முன்தினம்  ஒருதரப்பாக நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில்  72 ரன் வித்தியாசத்தில் மிக எளிமையாகத் தோற்கடித்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

ஐசிசி வேர்ல்டு லெவன் என்று இந்த போட்டியில் மட்டுமல்ல, இதற்கு முன் நடந்த பெரும்பாலான போட்டிகளிலும் தேர்வு செய்யப்பட்ட வேர்ல்டு லெவன் அணியில் ஃபார்மில் இல்லாத வீரர்களையும் தேர்வு செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் இதுபோன்ற கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கு டி20 போட்டியின் சுவாரஸ்யத்தையே இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதிலும் வேர்ல்டு லெவன் கேப்டன் ஷாகித் அப்ரிடி இந்தப் போட்டியில் தரமான கிரிக்கெட்டை அளிக்க விரும்புகிறோம் எனக் கூறிவிட்டு 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் பிரீயமியர் லீக்கில் இடம்பெற்ற அப்ரிதி, சோயிப் மாலிக் சிறப்பாக ஆடிய நிலையில், இந்தப் போட்டியில் ஒரு சம்பிரதாய முறைக்காக விளையாடினார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வளர்ச்சிக்காக நிதி திரட்டும் போட்டி என்பதால் அந்த நாட்டுக்கு அணி வீரர்கள் மட்டும்  தரமான கிரிக்கெட்டை அளிக்க வேண்டும் என்பது அவர்களுக்கான பொறுப்பு என்று தட்டிக்கழித்து விட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது

எதிரணியில் விளையாடும் வேர்ல்டு லெவன் அணியில் இடம் பெற்ற வீரர்களும் சுவாரஸ்யமான கிரிக்கெட் போட்டிக்கு உறுதியளிக்கும் விதத்தில் விளையாட வேண்டியது அவசியம்.

ஆனால், நேற்றைய போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் மட்டுமே நல்லதரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினார்கள், வேர்ல்டு லெவன் அணி வீரர்களில் இலங்கை வீரர் பெரேராவைத் தவிர மற்ற அனைவரும் சம்பிரதாய முறைக்காக கிரிக்கெட் விளையாடிவிட்டுச் சென்றனர்.

அதிலும், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய பில்லிங்ஸ், தினேஷ் கார்த்திக், அப்ரிடி, சோயிப் மாலிக் போன்றோர் பொறுப்பற்ற முறையில் பேட் செய்ததை என்னவென்று சொல்வது?

இதுபோன்ற கண்காட்சிப் போட்டிகள், நிதிதிரட்ட நடத்தும் போட்டிகளுக்கு வரும் மக்களுக்குத் தரமான கிரிக்கெட்டை உறுதியளிக்குமாறு செய்வது ஐசிசியின் கடமையாகும். வெற்றிக்காகப் போராடலாம், ஆனால், தோல்வி அடைவதற்காகப் போராடுவது என்பது வேர்ல்டு லெவன் அணியிடம் இருந்து கற்கலாம்.

அதேசமயம், டி20 போட்டியில் தாங்கள் சாம்பியன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது மேற்கிந்தியத்தீவுகள் அணி. 26 பந்துகளில் 58ரன்கள் குவித்த லூயிஸ், சாமுவேல்ஸ் 43, ராம்தின் 44 ரன்கள் ஆகியோரின் ரன் குவிப்பு அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. எவின் லூயிஸ் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

மேற்கிந்தியத்தீவுகளில் கடந்த 2017-ம் ஆண்டு இர்மா, மரியா புயலில் 5 கிரிக்கெட் அரங்குகள் சேதமடைந்தன. அதைச் சீர்செய்வதற்காக நிதி திரட்டும் பொருட்டு கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக லண்டன் ஓவல் மைதானத்தில் ஐசிசி வேர்ல்டுலெவன் அணிக்கும், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கும் இடையே ஒரே ஒரு டி20 போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டு, இந்தப் போட்டி நேற்று நடந்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு கேப்டனாக பிராத்வெய்ட்டும், வேர்ல்டு லெவன் அணிக்கு ஷாகித் அப்ரிடியும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர்.

டாஸ்வென்ற வேர்ல்டு லெவன் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய கெயில், லூயிஸ் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். கெயில் நிதானமாக பேட்டிங் செய்ய, லூயிஸ் காட்டடி அடித்தார். மில்ஸ், மெக்லநகென், சோயிப் மாலிக் பந்துவீச்சை வெளுத்து வாங்கி சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும்  பறக்கவிட்டார். அதிரடியாக பேட் செய்த லூயிஸ் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

58 ரன்கள் சேர்த்திருந்த போது ராஷித் கான் சுழலில் லூயிஸ் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர்.அடுத்து பிளட்சர் களமிறங்கி, கெயிலுடன் இணைந்தார்.

ஐபிஎல் போட்டியில் கிங்ஸ்லெவனில் இடம் பெற்று அதிரடியாக ஆடிய கெயில் இந்தப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சோயிப் மாலிக் பந்துவீச்சில் கெயில் ஒருபவுண்டரி உள்ளிட்ட 18 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். கெயில் சென்ற அடுத்த ஓவரில் பிளெட்சர் 7 ரன்களில் வெளியேறினார்.

தன் சொந்த நாட்டுக்கு அணிக்காக கெயில் சமீபகாலமாக விளையாடும்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதும், ஐபிஎல் போன்ற அதிகவருமானம் தரும் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

4-வது விக்கெட்டுக்கு சாமுவேல்ஸ்,ராம்தின் இருவரும் இணைந்து ஓவருக்கு பவுண்டரி, சிக்சர் அடிக்கத் தவறவில்லை .இதனால், அணியின் ஸ்கோர் 10 ரன்ரேட்டில் உயர்ந்தது. விளாசலில் ஈடுபட்ட சாமுவேல்ஸ் 22 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ராஷித்கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவரின் கணக்கில் 4 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும்.

அடுத்து வந்த ரஸல், ராம்தினுடன் சேர்ந்து கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்தார். 10 பந்துகளைச் சந்தித்த ரஸல் 3 சிக்சர்களுடன் 21 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராம்தின் 25பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்.

20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்தது.

வேர்ல்டுலெவன் தரப்பில் ரஷித்கான் 2 விக்கெட்டுகளையும், சோயிப் மாலிக், அப்ரிடி தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

200 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வேர்ல்டு லெவன் அணி களமிறங்கியது. சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருந்தும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது போட்டியை சுவாரஸ்யமில்லாமல் ஆக்கியது.

ரஸல், பத்ரியின் பந்துவீச்சில், 8 ரன்களுக்குள் முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது, போட்டியைக் காணவந்திருந்த ரசிகர்களின் சுவாரஸ்யத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. தமிம் இக்பால்(2), நியூசிலாந்தின் ரோஞ்சி டக்அவுட், பில்லிங்ஸ் (4) தினேஷ் கார்த்திக் டக்அவுட் என வருவதும் போவதுமாக இருந்தனர்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் பிளந்துகட்டிய தினேஷ் கார்த்திக் 5 பந்துகளைச் சந்தித்தும் ரன் ஏதும் எடுக்காமல் பத்ரி பந்துவீச்சில் வெளியேறியது விருப்பமில்லாமல் கிரிக்கெட் விளையாடியானாரோ என்ற எண்ணத் தோன்றுகிறது.

ஐபில் போட்டிகளில் அபாரமாக ரன்கள் குவித்த தினேஷ் காரத்திக், பில்லிங்ஸ் போன்றோர் டக்அவுட்டில் வெளியேறியது ஏதோ விருப்பமில்லாமல் போட்டியில் கலந்து கொண்டதைப் போல் இருந்தது.

வேர்ல்டு லெவன் அணியில் முக்கிய வீரர்களான சோயிப் மாலிக்(12), அப்ரிடி(11), ராஷித்கான்(9), மெக்லனகன்(11) என சொற்பரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும், இலங்கை வீரர் பெரேரா தனியாகப் போராடி 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். 37 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து பெரேரா ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்சர், 7பவுண்டரிகள் அடங்கும்.

16.4 ஓவர்களில் 127ரன்களுக்கு வேர்ல்டு லெவன் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்களில் தோல்வி அடைந்தது.

மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும், பத்ரி, ரஸல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்