ஆனால், ஒரு சம்பவத்தில் ரோகித் சர்மாவே பொறுமை இழந்து சகவீரர் ரவீந்திர ஜடேஜாவை அடிக்க நினைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கப் பயணம் மேற்கொண்டு இருந்தது. அப்போது, இந்திய வீரர்கள் தங்களின் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் சென்றனர். அப்போது நடந்த சம்பவத்தில்தான் ரவீந்திர ஜடேஜாவை அடிக்க வேண்டும் போல் தோன்றியது என ரோகித சர்மா தெரிவித்துள்ளார்.
அந்தச் சம்பவம் குறித்து ரோகித் சர்மா ’வாட் தி டக் ஷோ’ எனும் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, நாங்கள் எங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தோம். ஒருநாள் நான் என்னுடைய மனைவி, ரஹானே, ஜடேஜா மற்றும் அவரது மனைவி ஆகியோர் காட்டில் சஃபாரி பயணம் செல்ல முடிவு செய்தோம். நாங்கள் எல்லோரும் ஒரு ஜீப்பில் அமர்ந்து தென் ஆப்பிரிக்க காட்டுக்குள் பயணித்துக் கொண்டிருந்தோம். அனைத்து மிருகங்களையும் அமைதியான முறையில் ரசிந்து வந்தோம்.
சஃபாரி பயணத்தைத் தொடங்கும் போது, மிருகங்களைச் சீண்டக்கூடாது என்ற எச்சரிக்கையுடனே எங்களை அனுப்பிவைத்தார்கள். அதனால், மிகுந்த எச்சரிக்கையுடன், பயத்துடனே பயணம் செய்தோம். ஒரு இடத்தில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி நடந்தோம். அப்போது, சாலையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 3 சிறுத்தைப்புலிகள் நடந்து சென்றன.
அதைப் பின்பற்றியே நாங்களும் சத்தம் போடாமல் நடந்து சென்றோம். எங்களின் மனைவிகளும் அமைதியாக, பயத்துடனே வந்தனர். அடுத்த வினாடி என்ன நடக்கப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியாது என்ற பயத்துடனே நடந்தோம்.
அப்போது, நான், ரஹானே மனைவி ராதிகா, என் மனைவி ரித்திகா, ஜடேஜா ஆகியோர் காட்டின் மத்தியப்பகுதியை அடைந்துவிட்டோம். வாகனத்தைவிட்டு நீண்டதொலைவு வந்துவிட்டோம். அப்போது, இரு சிறுத்தைப்புலிகள் ஏதோ இரையை வாயில் கவ்வியபடி இருந்ததைப் பார்த்தோம். அந்தச் சிறுத்தைப்புலிகளும் அப்போதுதான் எங்களைத் திருப்பிப் பார்த்தன.
அந்த சிறுத்தைப்புலிகள் எங்களைத் திருப்பிப் பார்க்கவும் ஜடேஜாதான் காரணம். அமைதியாகச் சென்ற சிறுத்தைப்புலிகளை ஜடேஜா சிறு சத்திமிட்டு, வித்தியாசமாக ஊளையிட்டுக் கத்தி அழைத்தார். இந்த சத்தத்தைக் கேட்ட சிறுத்தைப்புலிகள் அதுவரை அமைதியாக இருந்த நிலையில் அதன்பின் எங்களைத் திரும்பிப் பார்த்தன. லேசாக உறுமத் தொடங்கியது.
உடனே நான் ஜடேஜாவைப் பார்த்து என்ன செய்கிறாய். நாம் அனைவரும் காட்டுக்குள் இருக்கிறோம் மறந்துவிட்டாயா. சிறுத்தைப்புலிகள் நம்மைப் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா. அவை இரையை வைத்து இருக்கின்றன. பசியோடு இருக்கின்றன. அமைதியாக இரு என்று கோபமாகக் கூறினேன். அந்த அனுபவம் எனக்கு மறக்க முடியாதது.
மறுபடியும் ஜடேஜா சத்தமிட்டதும், சிறுத்தைப்புலிகள் மீண்டும் எங்களை நோக்கி கோபத்துடன் திரும்பின. இதைப் பார்த்ததும், எனக்கு ஜடேஜா மீது கோபமாக இருந்தது. ஏனென்றால், எங்களுடன் எங்களின் மனைவிகளும் இருக்கிறார்கள், அவர்களின் நிலையை நினைத்துப் பார்க்காமல் கத்திய ஜடேஜாவைப் பார்க்க கோபமாக வந்தது. அவரை ஓங்கி முகத்தில் குத்திவிடலாம், கன்னத்தில் அறைந்துவிடலாம் எனத் தோன்றியது. ஆனால், எல்லை மீறி ஏதும் செய்துவிடக்கூடாது என்பதால், அமைதியாக இருந்துவிட்டேன். இப்போதும் அந்தச் சம்பவத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்தார்.