சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கொரோனா பரிசோதனை.. பயிற்சிக்கு சென்னை புறப்படுகிறாரா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்தவகையில், ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் பிசிசிஐ அனுமதி கோரியுள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்த போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்காவிட்டால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐபிஎல் தலைவர் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். அந்தவகையில், செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகள், நவம்பர் 10 -ம் தேதி அன்று நிறைவுபெறுகிறது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசிசிஐ பல விதிகளை அறிவித்தது. அதன்படி, ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள 8 அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் 4 முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா நெகட்டிவ் என வந்தால் மட்டுமே தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தல தோனிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என வந்தால், அவர் பயிற்சிக்கு நாளை சென்னை புறப்படவுள்ளதாக தகவல் வெளியானது.