காமன்வெல்த் போட்டி : ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கம்!
பட்ஜெட் காரணமாக 2026 காமன்வெல்த் போட்டியில் இருந்து ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்டவை நீக்கம் செய்யப்படுவதாக காமன்வெல்த் சம்மேளனம் அறிவிப்பு
கிளாஸ்கோ : 2026 -ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக கிரிக்கெட் இருக்காது எனக் காமன் வெல்த் சம்மேளனம் அறிவித்துள்ளது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. கிரிக்கெட் மட்டுமின்றி, பாட்மிண்டன், ஹாக்கி, ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் மற்றும் மல்யுத்தம் போன்ற பிற விளையாட்டுகளும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை இந்த போட்டிகளில் விளையாடி இந்தியா பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது போன்ற முக்கியமான போட்டிகள் காமன்வெல்த் விளையாட்டு 2026 இல் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது.
எனவே, இந்த போட்டிகளை பட்ஜெட்டுக்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியில் 10 விளையாட்டுகள் மட்டுமே வைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டு இருக்கிறது.இதன் காரணமாகத் தான் கிரிக்கெட் மட்டுமின்றி, பாட்மிண்டன், ஹாக்கி , ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் மற்றும் மல்யுத்தம் ஆகிய போட்டிகள் இந்த முறை நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2022- காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்திருந்தது. மல்யுத்தம் போட்டியில் (12), டேபிள் டென்னிஸ் (5), பேட்மிண்டன் (6),கிரிக்கெட் (1) என பதக்கங்களை வென்றது. எனவே, இப்படி முக்கிய போட்டிகளில் பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இந்த முறை இந்த போட்டிகள் இல்லாதது இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த முறை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தடகளம் மற்றும் பாரா தடகளம், குத்துச்சண்டை, bowls and para, நீச்சல் மற்றும் பாரா-நீச்சல், கலை ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிள் மற்றும் பாரா-டிராக் சைக்கிள் ஓட்டுதல், நெட்பால், பளுதூக்குதல் மற்றும் பாரா-பவர் லிஃப்டிங் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது.
அதைப்போல, ஜூடோ, மற்றும் 3-3 பேர் இணைந்து விளையாடும் கூடைப்பந்து மற்றும் 3-3 சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகளும் உள்ளது. பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த போட்டியில், 74 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3000 தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.