அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சென்னை வீரர்.!
- ஆல்-ரவுண்டர் சதாப் ஜகாதி அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- சதாப் ஜகாதி ஐபிஎல் தொடரில் சென்னை , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியவர்.
1998-1999 ஆம் ஆண்டு தனது முதல் வகுப்பு மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் சதாப் ஜகாதி அறிமுகம் ஆனார். அப்போதில் இருந்து உள்ளூர் போட்டிகளில் ஆல் ரவுண்டராகவும் வலம் வந்தார்.
தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில், 91 டி 20 போட்டிகளுடன், 92 முதல் வகுப்பு விளையாட்டுகளிலும் 82 லிஸ்ட் ஏ போட்டிகளில் ஜகதி இடம்பெற்றுள்ளார். இதுவரை கிட்டத்தட்ட 400 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்கிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2009-ம் ஆண்டு அவரை அறிமுகம் செய்தது. பின்னர் ஜகாதி 2010 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு பெரிய திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தார்.
மும்பை அணியின் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். 2010 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஷதாப் ஜகாதி15-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தில் சச்சின் விக்கெட்டையும், 5-வது பந்தில் சௌரப் திவாரி விக்கெட்டையும் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். சச்சின் விக்கெட்டை இழந்ததனால் தான் அந்த தொடரில் சென்னை கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு கோவா அணியில் ஷதாப் ஜகாதி சேர்க்கப்படவில்லை. அதன் பின் பயிற்சியாளராக தனிப்பட்ட முறையிலும், கனடா டி20 லீக்கிலும் செயல்பட்டார். இனி கோவா அணியில் இடம் பெற முடியாது என்ற நிலையில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
சச்சின் விக்கெட் எடுத்தது தான் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த தருணம் என ஓய்வை அறிவித்த பின் ஷதாப் ஜகாதி கூறினார். ஷதாப் ஜகாதி 2014-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் 2016-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிபிடத்தக்கது.