சென்னை ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அபார வெற்றி.!
இந்திய வீராங்கனை கர்மன் தண்டி, பிரான்சின் குளோ பாக்கிட் உடன் மோதி வெற்றி கண்டார். அடுத்ததாக நட்சத்திர வீராங்கனை புசார்ட்டை எதிர்கொள்கிறார்.
சென்னை ஓபன் டென்னிஸ் மகளிருக்கான தொடர் நேற்று நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதன் முறையாக சர்வதேச டென்னிஸ் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.
நேற்று முதல் நாளான ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. அதில் 2014ஆம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய கனடா நாட்டு வீரர் யூஜெனி புசார்ட் மற்றும் சுவிட்சர்லாந்த் நாட்டின் வீரர் ஜோனி ஜூகெர் ஆகியோர் மோதினர். இதில் புசார்ட் வெற்றிபெற்றார்.
இன்னோர் ஆட்டத்தில் உலக தரவரிசை பட்டியலில் 359-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை கர்மன் தண்டி மற்றும் 109ஆம் இடத்தில் உள்ள வீராங்கனை பிரான்சின் குளோ பாக்கிட் ஆகியோர் மோதினர்.
சொந்த மண் என்பதால், தைரியமாக விளையாடிய கர்மன் தண்டி 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பாக்கிட்டை அதிரடியாக வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி 35 நிமிடங்கள் சென்றது. டெல்லியை சேர்ந்த கர்மன் தண்டி அடுத்ததாக புசார்ட்டை எதிர்கொள்கிறார்.
2-வது நாளான இன்று தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கே மற்றும் ரஷிய வீராங்கனை அனஸ்டசியா கசனோவா ஆகியோர் பலபரீட்சை நடத்துகின்றனர்.